கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி மெக்கோவாவில் பிரஜ்யோதி ஐடிஏ கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா கலந்துகொண்டார். அப்போது அஸ்ஸாம் ரைபில்ஸில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான 79 வயதாகும் தாஸ் என்பவரது கைகளை இறுக்கி பற்றிய தலாய்லாமா அவரை கட்டி அணைத்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இந்த உணர்ச்சி பூர்வமான சந்திப்பு அனைவரையும் நெகிழவைத்தது.

கடந்த 1959ம் ஆண்டு சீனாவில் இருந்து தலாய்லாமா தப்பி வந்தபோது அவரை இந்திய எல்லையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தவர் இந்த தாஸ். தாஸ் குறித்து தலாய்லாமா பேசுகையில், ‘‘58 ஆண்டுகளுக்கு முன் என்னை பாதுகாப்பாக இந்தியாவுக்குள் அழைத்து வந்தவர். அவரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அவரது முகத்தை பார்க்கும் போது எனக்கும் வயது ஆகிவிட்டது என்பதை காட்டுகிறது” என்றார்.

1959ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி சீனாவில் பிளவு ஏற்பட்ட போது அங்கிருந்து தலாய்லாமா இந்தியாவிற்கு தப்பி வந்தார். அவரை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியான மெக்மோகனில் இருந்து தாஸ் உள்ளிட்ட 5 வீரர்கள் பாதுகாப்பாக இந்தியாவுக்குள் அழைத்து வந்தனர். இவர்களில் தாஸ் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார். அவருக்கு அப்போது 20 வயது இருக்கும். தலாய்லாமாவுக்கு அப்போது 23 வயது.

இது குறித்து தாஸ் கூறுகையில்,“என்னையும், எனது சக வீரர்கள் 4 பேரையும் சர்வதேச எல்லைக்கு சென்று ஒரு விருந்தாளியை பாதுகாப்பாக அழைத்து வருமாறு எங்களது படை பிரிவு கமாண்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையிலேயே நாங்கள் சென்று தலாய்லாமாவை அழைத்து வந்தோம்” என்றார்.