சென்னை
சென்னை வேளச்சேரி – கடற்கரை ரெயிலில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் ரெயிலில் ஒரு மனம் நலம் குன்றிய பெண் பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகவும் அதையொட்டி அந்தப் பெண்ணுக்கு தொல்லை அளித்த வாலிபர் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்தப் பெண்ணை இன்று காவல்துறைத் தலைவர் பொன். மாணிக்கவேல் மருத்துவ மனையில் சந்தித்துள்ளார்.
அதன் பிறகு பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி வந்துக் கொண்டிருந்த பறக்கும் ரெயிலில் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தை தாண்டும் போது பெண்கள் பெட்டியில் இருந்து ஒரு பெண்ணின் அலறல் கேட்டது. அந்த ரெயிலில் சென்றுக் கொண்டிருந்த காவலர் சிவாஜி அடுத்த ரெயில் நிலையத்தில் அந்தப் பெண்கள் பெட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஒரு இளம்பெண்ணை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்வதைக் கண்டு அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். பொதுமக்கள் உதவியோடு அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார். நான் இன்று அந்தப் பெண்ணை சந்தித்து பேசிய போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அவர் தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
ரெயில்வே பாதுகாப்புப் படை காவலரான சிவாஜியை வெகுவாக பாராட்டிய பொன். மாணிக்கவேல் அவருடைய துரிதமாக செயல் பட்டமைக்காக ரூ.5 ஆயிரம் பரிசளித்துள்ளார்.