எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பு….

பெரியாரிஸ்ட்டான இன்னொரு நடிகரை சுட்டுத்தள்ள எம்.ஆர்.ராதா ரகசியப் பயிற்சி !

யார் அந்த

பெரியார் ஆதரவு நடிகர் ?

‘திடுக்’ தகவல் !

 

◆ எம்.பி. திருஞானம் ◆

 

தமிழ் திரைப்பட உலகில் புதிரானவராகவும் புரட்சியாளராகவும் இருந்தவர், கடவுள் மறுப்பாளரான எம்.ஆர். ராதா ! பெரியார் மீதும் அவரது பேச்சுக்களைக் கேட்டு, காமராஜர் மீதும், பிரியமாக இருந்தவர் !

1967 ஜனவரி 12-ம் தேதி மாலை, தி.மு.க.வின் பொருளாளரான ‘புரட்சி நடிகர்’ எம்.ஜி.ஆரை, “நடிகவேள்” எம்.ஆர்.ராதா, துப்பாக்கியால் சுட்டுவிட்டார்!  தானும் சுட்டுக்கொண்டார் ! இரண்டுபேருமே தப்பிப் பிழைத்தனர் !

இதெல்லாம், ஊரும் உலகமும் அறிந்த விஷயம் ! 

◆ எம்.ஜி.ஆரைப் போலவே, இன்னொரு பிரபல நடிகரையும் சுட்டுதள்ள, “நடிகவேள்” எம்.ஆர்.ராதா கமுக்கமாக ஒரு திட்டம் போட்டார் ! அதற்காக, ரகசியமாக துப்பாக்கி ஒன்றை வாங்கி, வாரக் கணக்கில் பயிற்சியும் செய்தார் !

◆ அந்தக் காலத்தில், வெள்ளி விழா கண்ட நாடகங்கள் ஒருசிலதான் ! அதில் ஒன்று, 1941ல் சினிமாவாக தயாரிக்கப்பட்ட ‘இழந்த காதல்’ !

◆ சேலம் ஓரியண்டல் தியேட்டர்சில் இந்த நாடகம் ‘நூறாவது நாள்’ விழாவை கொண்டாடியது ! நூறாவது நாள் முடிந்த பிறகும், ‘இழந்த காதல்’ நாடகம், தொடர்ந்து நடந்து, சாதனை செய்தது !

இந்த நாடகத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம், நாடகத்தில் ‘ஹீரோயின்’ பத்மாவாக வேஷம் போட்ட மாரியப்பனும், ‘வில்லன்’ ஜெகதீசாக நடித்த எம்.ஆர். ராதாவும்தான் !

◆ கதாநாயகி பத்மாவுக்கு (மாரியப்பன்) பதிலாக வேறு ஒரு நபரை தயார் செய்துவிட முடியும் ! ஆனால், வில்லன் ஜெகதீசுக்கு மாற்றாக ஒரு நடிகரை தயார் செய்துவிட முடியாது !

ஏனென்றால், அந்தக் காலத்திலேயே, அரசியல் ‘பஞ்ச்’ வசனங்களை, ரசிகர்கள் விரும்புகிறபடி, தனது டயலாக்கில் கோர்த்து வாங்கிவிடுவார், ராதா ! ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, ரசிகர்கள் கலாட்டாவே செய்துவிடுவார்கள் ! எனவே, இந்த கேரக்டருக்கு எந்த கொம்பனையும் போட்டு, சமாளித்துவிட முடியாது !

◆ ‘இழந்த காதல்’ நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க  மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் விரும்பினார் ! நாலு முறை, அந்த நாடகக்தைப் பார்த்தார் ! ஏனோ, அது நடக்கவில்லை !

◆ ஆனால், பெரியார் ஆதரவாளரான தமாஷ் நடிகர் ஒருவர்,  சினிமாவாக தயாரிக்க திட்டம் போட்டார் ! 1949ல் திமுக துவங்கப்பட்ட பிறகு, அதில் தீவிரமாக செயல்பட்ட கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், எம். ஆர் ராதா, எம்.ஜி.ஆர்., டி. வி நாராயணசாமி, போன்ற நாடக மற்றும் திரைப்பட நடிகர்களில், முக்கியமானவராக, இருந்த ‘தமாஷ்’ பேர்வழி ! மக்களிடம் செல்வாக்காகவும், நாலைந்து கார்களோடும், பிரம்மாண்ட பங்களா வசதியோடும்  இருந்தவர் !

◆ இவர், ‘இழந்த காதல்’ நாடகத்தை தயாரிக்க முன் வருவது, நல்ல விஷயம்தானே ?ஆனால், இந்த தமாஷ் நடிகருக்கு, நாடகத்தில் ‘வில்லன்’ வேஷம் போட்டு, ‘சபாஷ்’ பெற்றுக் கொண்டு புகழோடு இருக்கும் எம்.ஆர். ராதாவை பிடிக்கவில்லை ! காரணமும் அப்போது யாருக்கும் புரியவில்லை !

◆ விஷயம், எம்.ஆர். ராதாவின் காதுக்குப் போகிறது ! ‘இழந்த காதல்’ நாடகத்தில் வில்லன் ஜெகதீசாக நடிக்கும் எம்.ஆர். ராதாவை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகரைப் போட்டு, ஒரு நாடகத்தை நடத்துவது என்றும், அப்போது ‘பப்ளிக் ரெஸ்பான்ஸ்’ எப்படி இருக்கிறது என்று ‘பல்ஸ்’ பார்ப்பது என்றும், அந்த பிரபல தமாஷ் நடிகர் முடிவு செய்தார் !

டி. எஸ். பாலையா

◆ பொள்ளாச்சியில், ‘இழந்த காதல்’ நாடகம், தடபுடல் விளம்பரங்களுடன் துவங்கியது ! ‘வில்லன்’ ஜெகதீஷ் வேஷத்தில் டி. எஸ். பாலையா வந்தார் ! ஜனங்களுக்கு பிடிக்கலே ! கூச்சல் – கலாட்டா நடந்தது !  வெங்கடேசன் என்ற நடிகரை மாற்றிப்போட்டும், நாடகம் கலேபரத்துடன் நடந்து – முடிந்தது !

◆ அந்த பிரபல நடிகரின் சேட்டைகளை எல்லாம், வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருந்தார், எம்.ஆர். ராதா !

◆ நாடகக் கம்பெனி, பொள்ளாச்சியிலிருந்து, கோயம்புத்தூருக்கு இடம் பெயர்ந்தது ! இங்கேயும் ‘இழந்த காதல்’ நாடகம் ! ‘வில்லன்’ ஜெகதீசாக,  பஷீர் என்ற நடிகரை மேடை ஏற்றினார்கள், அந்த பிரபல தமாஷ் நடிகரின் அட்வைஸ்படி !

◆ ஒரே கலாட்டா ! இந்த கலாட்டா, பொள்ளாச்சி கலாட்டாவை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது ! ஜனங்க, தியேட்டரில் புதிதாக வாங்கிப் போட்டிருந்த நாற்காலிகளை எல்லாம் உடைத்துத் தூள் தூளாக்கி விட்டனர் ! அதுமட்டுமல்ல; “ஒரே ஒரு சீனாவது ராதா தலையைக் காட்டினால்தான் சும்மாவிடுவோம்; இல்லேன்னா ஒரு பயலையும் வெளியே விடமாட்டோம்…” என்று சொன்னாங்க !

நாடகக் கம்பெனி உரிமையாளரான பொன்னுசாமிப் பிள்ளை, ராதாவிடம் “ஒரு சீனாவது வந்து நடிச்சிட்டுப் போப்பான்னு” கெஞ்சினார் !

ராதா ஒத்துக்கிட்டு, ஒரே ஒரு சீன் மட்டும் வில்லன் ஜெகதீசாக நடித்தார் ! ஜனங்கள் “எம்.ஆர். ராதாவுக்கு ஜே” என்று முழங்கினார்கள் !

கே.பி. காமாட்சி

◆ நிலவரம் இப்படியெல்லாம் கலவரமானபோதிலும், அந்த பிரபல தமாஷ் நடிகர், கொஞ்சமும் மசியவில்லை. மனம் மாறவே இல்லை !

எம். ஆர். ராதாவுக்கு பதிலாக, வில்லன் ஜெகதீஷ் வேடத்தில் கே.பி. காமாட்சியை போட்டு, ‘இழந்த காதல்’ சினிமா படப்பிடிப்பை கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் துவக்கிவிட்டார் !

◆ சில மாதங்கள் கடந்தது !  நண்பர் ஒருவர் கேட்டார், “பொன்னுசாமிப் பிள்ளையை பிரிந்து, தனியா வந்துட்டீங்க. அத்தோடு, அந்த தமாஷ் நடிகருடன் ஏற்பட்ட தகராறும் மறந்து போச்சா ?”

எம்.ஆர். ராதா சொன்னார், “மறப்பேனா ? யாரை மறந்தாலும் மறப்பேன். மன்னிப்பேன். என் புகழிலே ஒருத்தன் ‘ராபெரி’ பண்ண வரான்னா அவனை நான் மறக்கவும் மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன்...” என்று, மிகவும் திட்டவட்டமாக சொன்னார் !

◆ அந்த நண்பர், “அதற்காக நீங்கள் என்ன செய்துவிடமுடியும் ?” என்று பொருள்படும்படி, கொஞ்சம் ஏளனமாகக் கேட்டார் !

◆ எம்.ஆர். ராதா சட்டென்று சொன்னார் : “சுட்டுத் தள்ளுவேன்…”!

 

◆ எம்.ஆர். ராதா, ரகசியப் பயணமாக உளுந்தூர்பேட்டைக்குப் புறப்பட்டார் ! அவருக்குப் பிரியமான – அவர் பேச்சைக் கேட்கிற மாதிரி ஒரு ரிவால்வரை செலக்ட் செய்து, ‘டெஸ்ட்’ செய்து, வாங்கிக் கொண்டார் !

◆ குறி தவறாமல் சுட்டுத்தள்ள வேண்டும் அல்லவா ? அதற்காக, டுமீல் டுமீல் என்று, தன்னுடைய அறையிலேயே சுட்டு, ‘பிராக்டீஸ்’ செய்தபடி இருந்தார், எம்.ஆர். ராதா ! அக்கம்பக்கம் இருக்கிற குடும்பஸ்தர்கள் எல்லோருக்கும் இது வழக்கமான சவுண்டுதான் ! ஏன்னா, நாடகக்காரர்கள் அப்பப்ப இப்படி ‘ரிகர்சல்’ செய்வதும் அதை கேட்பதும், அவர்களுக்கு பழக்கமாகிவிட்ட விஷயம் ! அதனால், யாருக்கும் சந்தேகம் வரவில்லை ! அப்போது எம்.ஆர். ராதா, டி.கே. சம்பங்கியின் டிராமா கம்பெனியில் இருந்தார் ! அங்கேயும், ‘இழந்த காதல்’ நாடகம் தான் ! எம்.ஆர். ராதாவுக்கு, வில்லன் ஜெகதீஷ் வேஷம்தான் !

◆ எப்பேர்ப்பட்ட வில்லனையும் தமாஷா பேசி, குபீர்னு சிரிப்பு மூட்டும் கில்லாடியான பிரபல தமாஷ் நடிகர், எம்.ஆர். ராதாவை மட்டும் சிரிக்க வைக்க முடியவில்லை !

◆ தனது புகழை கொள்ளையடித்த அந்த பிரபல தமாஷ் நடிகரை எம்.ஆர். ராதா சுட்டுத்தள்ளும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது !

இந்த நிலையில், எம். ஆர். ராதாவின் இந்தப் பிளான், பொன்னுசாமிப் பிள்ளைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது ! அவர், சும்மாயிருப்பாரா ? விஷயத்தை ஓடிப்போய், அந்த பிரபல நடிகரிடம் சொல்லிவிட்டார் !

◆ அப்போது எம்.ஆர். ராதா, சம்பங்கியுடன் சேர்ந்து, கரூரில் நாடகம் போட்டுக்கிட்டு இருந்தார் ! செய்தியறிந்த அந்த பிரபல நடிகர், கொஞ்சமும் பதட்டப்படாமல், காரில் கரூருக்கு வந்து, எம்.ஆர். ராதா தங்கியிருந்த வீட்டின் மாடி அறைக்குள் நுழைந்தார் !

எம்.ஆர். ராதா, தன்னையும் அறியாமல், எழுந்து நின்றார் ! எடுத்த எடுப்பிலேயே, “ஏன்டா, உனக்கு புத்தி இருக்காடா ? பங்களா, பணம், காரு, வயசு, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; நடிப்புன்னு வரப்போ, அதை உனக்குச் சொல்லிக் கொடுக்கிற யோக்கியதை, தகுதி எனக்கு இருக்காடா ? அதனால்தான், நீ நடிச்ச வில்லன் ஜெகதீஷ் கேரக்டருக்கு, கே.பி. காமாட்சியைப் போட்டேன். இப்படி நடிக்காதே; அப்படி நடிக்காதேன்னு அவனை நான் சொல்வேன். உன்கிட்டே அப்படி சொன்னா, உனக்கு நான் மரியாதைக் குறைவு செய்தது ஆகாதா ? அந்த அவஸ்த்தையை நீ வேணும்னா பொறுத்துக்கலாம்; என்னாலே பொறுத்துக்கொள்ள முடியாதுடா… புரியுதா ? புரியுதாடா…?”

◆ எம்.ஆர். ராதா, பெட்டிப் பாம்பாக அடங்கி, தலை கவிழ்ந்து நின்றார் !

◆ “இப்ப நான் சாகத் தயாராயிட்டேன், எங்கே துப்பாக்கி ? எடு… சுடு…” என்றார், பிரபல தமாஷ் நடிகர், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் !

◆ எம்.ஆர். ராதா தாழ்ந்த குரலில் சொன்னார் :  “இப்ப நீங்கதான் என்னை சுடணும்…!”

◆◆◆