புதுடெல்லி: 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் பெரியளவில் அதிகரித்துள்ளது.
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், இதுவரை 13 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில், வேறு எந்த மாநிலங்களையும்விட, வாக்குப்பதிவு சதவிகிதம் 10%க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி 6 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் 74.90% வாக்குகள் பதிவாகின. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பதிவான வாக்குகள் வெறும் 64.84% மட்டுமே.
இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் 69.1%. ஆனால், கடந்த 2014 தேர்தலில், அதே தொகுதிகளில் 57.6% வாக்குகள் மட்டுமே பதிவாகின. எனவே, மொத்தமாக பார்க்கையில் 10%க்கும் மேல் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தில் பதிவான வாக்கு சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், குறைந்தளவே வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து அம்மாநில தேர்தல்அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.