போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கக் கோருகிறார், அவர் தனது தவறை உணர்ந்து கொண்டதாக கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா அந்த பகுதியில் கூலி வேலை செய்துவரும் பழங்குடியினத் தொழிலாளிமீது சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சித்தி மாவட்டத்தின் வீடியோ ஒன்று என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது. இதில் குற்றவாளியைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், நடவடிக்கையில் அந்த நபருக்கெதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) போடுமாறும் உத்தரவிட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டார்.
தொடர்ந்து, பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மீது அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. மேலும் அவரது வீடு இடித்து தள்ளப்பட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பழங்குடித் தொழிலாளியை அழைத்த முதல்வர் சவுகான், குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்ததிலிருந்து மனம் வருத்தத்தில் உழல்வதாகவும், அவரிடமும் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முதெரிவித்திருந்தார். அதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் காலைக் கழுவி அவரிடம் மன்னிப்புக் கேட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது.
இந்த நிலையில், தன்மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை விடுவிக்கும்படி, பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். தனது தவறை அவர் உணர்ந்து விட்டதால், அவரை விடுவிக்கும்படி மாநில முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.