டில்லி
இன்று மக்களவையில் பால் பற்றிய கேள்விக்கு உப கேள்விகளாக கோமியம் மற்றும் சாணி பற்றி பா ஜ க பெண் எம் பி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா ஜ க வின் பெண் எம் பி ஆன மீனாட்சி லேக்கி என்பவர் டில்லி மில்க் சப்ளை நிறுவனத்தின் பால், தயிர், நெய் போன்ற பொருட்களின் தரம் மோசமடைந்துள்ளது பற்றி ஏதும் புகார் வந்துள்ளதா எனவும் அப்படி இருப்பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கான பதிலை அளிக்க இன்று விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் வந்திருந்தார். பாராளுமன்ற வழக்கப்படி இந்த கேள்விக்கு சம்பந்தமாக மேலும் இரு உப கேள்விகள் கேட்க அனுமதி உண்டு.
அதன்படி மீனாட்சி, ”ஒரு விவசாயி கோமியம் (பசுவின் சிறுநீர்) மூலம் தனது வியாதி குணமடைந்துள்ளதாக கூறியுள்ளார். உண்மையில் கோமியத்துக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதா? தற்போது காற்றில் ஈரப்பதம் குறைவதால் சாணியைக் கொண்டு அதிகப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுவது உண்மையா?” எனக் கேட்டார்.
சபாநாயகர். ”பசுவின் பாலைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு பதில் பசுவின் சிறுநீரைப் பற்றியும் பசுஞ்சாணியைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள உறுப்பினர் ஆர்வம் காட்டுகிறார். இதற்கு பதிலளிக்க விரும்பினால் அமைச்சர் அளிக்கலாம்” என சிரிப்புடன் கூறினார்.
அமைச்சர் சிங், “பசுவின் சிறுநீர் மற்றும் சாணி பற்றி ஆராய விரைவில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மற்றும் முதல் கேள்விக்கான பதில் என்னவென்றால் இதுவரை டில்லி மில்க் சப்ளை பொருட்களைப் பற்றி எந்த புகாரும் வரவில்லை” என தெரிவித்தார்