சென்னை:

சென்னை மவுண்ட்ரோடில்   ஜெமினி மேம்பாலம் அருகில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் மாநகரப்பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் சிக்கியது.

சென்னையில் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை ஏற்படுத்தி  மெட்ரோ ரயில் செல்வதற்கான பணி நடந்து வருகிறது. இதனால் நகரில் அவ்வப்போது சாலைகளில் விரிசல் ஏற்படுவது சிறு பள்ளம் ஏற்படும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் ஜெமினி மேம்பாலம் அருகில் மெட்ரோ பணி நடக்கும் இடத்தின் அருகில் திடீரென பெரும் பள்ளம் ஏற்பட்டது. அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி சென்றுகொண்டிருந்த பேருந்து அந்த பள்ளத்தில் சிக்கியது. அப்போது பேருந்து, நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தது. பள்ளத்துக்குள் பேருந்து இறங்கத்துவங்கியதுமே, ஓட்டுநர் பயணிகளை இறங்கச் சொல்லவே, அனைவரும் இறங்கிவிட்டனர்.

பேருந்து அருகில் சென்று கொண்டிருந்த ஒரு காரும் பள்ளத்தில் இறங்கிவிட்டது. அந்த காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரதீப் என்பவரை பொதுமக்கள் மீட்டனர். .

பேருந்து மற்றும் காரில் பயணித்தவர்கள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். இதில் உயிரிழப்போ , காயமோ ஏற்படவில்லை.

தற்போது இந்த பள்ளம் குறித்து புவியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் காவல்துறை இணை ஆணையரும் பார்வையிட்டு வருகிறார்.

தற்போது தீயணைப்புத்துறையினர் ராட்சத கிரேன் மூலம்  பேருந்தையும், காரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.