கோயமுத்தூர்:  கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்று வரும்  சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 54 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.  இந்த மநாட்டில்,  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக  மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கோவை சென்றுள்ளார்.  நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா.ர் நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து இன்று கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டைத் தொடர்ந்து,  முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.  ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதுடன்,  ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன்,  13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. தமிழ்நாடு ஃபின்டெக் பாலிசியும், தமிழ்நாடு ஒற்றைச் சாளர செயலியும் இன்றைய நிகழ்ச்சியில் தொடங்கிவைக்கப்பட உள்ளன.

 திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், 3-வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.