சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உடனடி அபராதம் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்யும் திட்டம் இன்றுமுதல் தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவல்துறையினர், வாகன ஓட்டிகளில் ஹெல்மெட் அணிவது குறித்து கெடுபிடி காட்டாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஹெல்மெட் அணிவதை அமல்படுத்தி வருகின்றன. இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசாருக்கு  உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல்  செப்டம்பர் 7 தேதி வரை வாகன விபத்துக்கள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது. அதில் சென்னை மாநகரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 325 பேர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளனர். சென்னை மாநகரத்தில் ஏற்பட்ட விபத்தில் மட்டும் 659 பேர் உயிர்  இழந்துள்ளனர். குறிப்பாக 1056 பேர் ஹெல்மெட் அணியாததால் காயமடைந்துள்ளனர். அதில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த  ஆய்வில் 72% பேர் மட்டுமே ஹெல்மெட் அணிவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இருச்சக்கர வாகன ஓட்டிகள்  அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்கும் வகையிலான பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் மீண்டும் முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, இன்றுமுதல் (13ந்தேதி)  முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், அப்படி மீறினால் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும்,காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், அப்படி அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.