வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.
முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த ‘சன்’ ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல இடங்களில் போட்ட வேகத்தில் அகற்றப்பட்டன.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் அவற்றை அமைப்பதற்கும் அகற்றுவதற்கும் சென்னை மாநகராட்சி கருவூலத்திற்கு தொடர்ச்சியான செலவுகளை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தது.
இருப்பினும், தற்போது புதிதாக பருவமழை காலத்திலும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக கூரைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையடுத்து இந்த நிழற்கூரைகள் வெயில் மற்றும் மழை ஆகிய இரண்டு கால நிலைக்கும் ஏற்றவாறு நிரந்தரமாக அமைக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிதாக அமைக்கப்படும் பாதுகாப்பு கூரைகளின் இரு பக்கமும் பைபர் ஷீட்டுகளும் மேலே க்ரீன் நெட்டுகளும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.
சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால் ஆண்டுதோறும் பல லட்சம் இழப்பு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள் அதற்கு க்ரீன் ஷேட் நெட்களுக்கு மாற்றாக ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அல்லது வெப்பத்தை எதிர்க்கும் கண்ணாடியிழை கலவை போன்ற நீடித்து உழைக்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.