குஜராத் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த பயணிகளின் உடைமைகளை பைக்கில் வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த 28ம் தேதி வடமாநில ஆன்மிக தலங்களான காசி, சாய்பாபா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு 18 நாட்கள் ஆன்மிக பயணம் சென்றனர்.
கடந்த 7ம் தேதி இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். இரவு உணவை முடித்துக் கொண்டு, அதிகாலை 4 மணியளவில் குஜராத் மாநிலத்துக்குப் பேருந்தில் அனைவரும் வந்து கொண்டிருந்தபோது, விடுதி அருகே நின்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்திருந்ததால், ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, பேருந்தின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரில் ஒருவர் பேருந்தின் பின்புற ஏணி வழியாக பேருந்தின் மீது ஏறுவது பதிவாகியுள்ளது.
ஓடும் பேருந்தின் மீது பாய்ந்து ஏறிய அந்த நபர் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை கரும்பு கட்டுகளை தூக்கி போடுவது போல் கீழே தூக்கி வீசிவிட்டு மீண்டும் ஏணிவழியாக இறங்கி பின்னால் வந்த பைக்கில் அமர்ந்துகொண்டார் இந்த காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.
யார் சொன்னது? மோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்று?
குஜராத்தில் மோடி இளைஞர்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுத்துள்ளார்.
கோவையில் இருந்து வட மாநில கோவில்களுக்கு பேருந்தில் சுற்றுலா சென்ற தமிழக பக்தர்களின் உடமைகளை குஜராத் அருகே ஓடும் பேருந்தில் துணிகர கொள்ளையடித்த… pic.twitter.com/isCGb2bHI3
— Kovai Harish (@KovaiHarish) June 9, 2023
சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறியதாவது:- “கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மிகச் சுற்றுலாவாக வட மாநிலங்களுக்குச் சென்றோம். காசி மற்றும் பிற கோவில்களுக்கு சென்றுவிட்டு ஒரிசாவில் இருந்து குஜராத் மாநிலம் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், எங்களுடன் வந்த 10 பேரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். நாங்கள் பயணம் செய்த பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறிய அவர் குஜராத்தை அடைந்து தங்குமிடத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது என்று கூறினார்.
மேலும், துணிகளுக்கு இடையே வைத்திருந்த 25,000 ரூபாய் பணம் கொள்ளைபோனதாக தெரியவந்துள்ளது. வடமாநிலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார்.
வழக்கமாக வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் நடப்பது வழக்கம். ஆனால் இதுபோன்ற பயணிகள் பேருந்தில் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பது தமிழக சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.