பரம்பரை பேர் சொல்ல பேரப்பிள்ளை வேண்டும் அல்லது ரூ. 5 கோடி இழப்பீடு வேண்டும் என்று மகன் மற்றும் மருமகள் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சாதனா பிரசாத் – சாகர் இடையேயான இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா மனு செய்திருக்கிறார்.

தனது கட்சிக்காரருக்காக ஸ்ரீவஸ்தவா வழங்கியுள்ள இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது மகனுக்கு 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் தேதி திருமணம் ஆனது, ஒரே மகனான அவரை சிறு வயது முதல் நன்கு படிக்க வைத்து அமெரிக்காவில் விமானி பயிற்சி கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தேன்.

இப்போது ஒரு முன்னணி விமான நிறுவனத்தில் விமானியாக பணி புரிகிறார். அமெரிக்காவில் படிப்பு மற்றும் தங்குவதற்கு செலவு என்று அவருக்காக பல லட்சங்கள் செலவு செய்தேன்.

திருமணத்திற்குப் பின் 5 லட்ச ரூபாய் செலவு செய்து தேனிலவுக்கு இருவருவரையும் தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

மகனும் மருமகளும் சேர்ந்து வெளியில் சென்று வர அவர்களுக்காக வங்கியில் கடன் பெற்று 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தேன்.

அவர்களை நல்ல முறையில் வைத்துக் கொள்ள இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.

ஆனால், எனது மருமகளுடன் அவரது வீட்டில் வசித்து வரும் எனது மகனை என் மருமகளும் அவரது பெற்றோரும் அவர்கள் சொல்படி ஆட்டுவித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் எனது வம்சத்தின் பெயர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்ற ஏக்கம் எனக்கும் எனது கணவருக்கும் உள்ளது.

தற்போது மனைவியுடன் ஹைதராபாத்தில் வசித்து வரும் எனது மகனும் மருமகளும் இன்னும் ஓராண்டில் எங்கள் பேர் சொல்ல ஒரு குழந்தை பெற்று தர வேண்டும் என்று நீதிமன்றம் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

இல்லையென்றால், எனக்கும் எனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஹரித்வார் நீதிமன்றத்தில் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.