உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்ராக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு டாடன் பகுதியைச் சேர்ந்த ஒரு பையனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அச்சடித்து சொந்த பந்தங்களுக்கு விநியோகித்த நிலையில் மணமகளின் தாயும் மணமகனும் வீட்டை விட்டு ஓடிப்போயுள்ளனர்.
மகளுடன் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் பரிச்சயம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு தேவையான புடவை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருவதாகக் கூறி மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் தலைமறைவானார்.
அதேவேளையில், மாப்பிள்ளையும் தனது தந்தைக்கு போன் செய்து தான் இனி வீட்டிற்கு வரப்போவதில்லை தன்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இருவரும் காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட நிலையில், அவர்கள் இருவரும் உத்தரகண்ட் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருமணம் நின்றுபோனதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்து போன மகளும் தந்தையும் அக்கம்பக்கத்தினரின் கேள்விக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
தவிர, தனது திருமணத்திற்காக தனது தந்தை உழைத்து சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை மட்டும் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் தனக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ஓடிப்போன அவரை இனி தாயாக ஏற்க மாட்டேன் என்றும் திருமணம் நின்று போன வேதனையில் உள்ள அந்த மணப்பெண் கூறியுள்ளார்.
மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் மாமியார் ஓடிப்போன இந்த சம்பவம் உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.