சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தின விளையாட்டு அரங்கம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் பாரம்பரிய சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது. கடல்பகுதிகளின் வளம் மற்றும் மீன் வளங்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க கடந்த 2020-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்க கோரி சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடல்சார் மக்கள் சங்கமம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கைககளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.