சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாமக மாநிலத்துணைப்பொதுச் செயலாளர் உள்பட 300க்கும் மேற்பட்ட பாமகவினர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
அதிமுகவை கடுமையா விமர்சித்து வந்த பாமக, தேர்தலின்போது, அதிமுகவிடம் சரணடைவது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, பல முக்கிய பாமக நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பாமக தலைமைமீதான அதிருப்தி காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் பாமகவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.
அதுபோல பட்டுக்கோட்டை நகர அதிமுக முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ்.சிவகுமார் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு. ஏனாதி பாலசுப்பிரமணியன், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் திரு. துரை.சந்திரசேகரன், திரு. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், MP, பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.