லிஸ்பன்

சுமார் 100 டால்பின்கள் மேற்கு ஆப்பிரிக்கத் தீவு ஒன்றின் கடற்கரையில், இறந்து, கரை ஒதுங்கியுள்ளன.

உலகெங்கும் சுற்றுச் சூழல் மாசு அதிகரித்து வருகிறது.   குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் மக்கிப் போகாத தன்மை கொண்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஆர்வலர்கள் மிகவும் வலியுறுத்தி வருகின்றனர்.   நிலத்தில் மட்டுமின்றி நீரிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் பல உயிரினங்கள் பாதிக்கப்படுகின்ற எனப் பல ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன.

மேற்கு ஆப்ரிக்காவில் ‘போன் விஸ்டா என்னும் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் இறந்த பின்னர், கரையில் ஒதுங்கி உள்ளன.  இதைக் கண்டு  அதிர்ந்த  பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றில் சிலவற்றை எடுத்து மீண்டும் கடலுக்குள் போட்ட போதிலும் அவை மீண்டும் கடற்கரைக்குத் திரும்பி உள்ளன.

இவ்வாறு உயிரிழந்து  கரையில் ஒதுங்கியவற்றில் 136 டால்பின்கள்  புல்டோசர்கள் மூலம் புதைக்கப்பட்டன.   இதில் 50 டால்பின்களில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர  மீதமுள்ள  டால்பின்களும் உச்சபட்ச உறை நிலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த டால்பின்களை ஸ்பெயின் நாட்டின், லாஸ் பாமாஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து நிபுணர்கள் வந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும்  அவற்றின் முடிவுகளில் இருந்து இந்த டால்பின்களின் இறப்புக்கான காரணம் தெரியவரும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.