டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 69 பேர் உள்பட நாடு முழுவதும் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மத்தியஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்தஒரு வாரத்தில் 752 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவித்துள்ளதுது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளம், மகாராஷ்டிரம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 69 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று (மே 26) காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் தற்போது 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 209 பேர், டில்லியில் 104, குஜராத்தில் 83, தமிழ்நாட்டில் 69, கர்நாடகத்தில் 47 , உத்தரப் பிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, மேற்கு வங்கத்தில் 12, ஹரியாணா, புதுச்சேரியில் தலா 9, ஆந்திரத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், கோவா, தெலங்கானாவில் தலா ஒருவர் என மொத்தம் 1,009 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரத்தில் 4 பேர், கர்நாடகத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
