டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்,

நாடு முழுவதும்  கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 3லட்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், பயனர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் கடுமையான தட்டுப்பாடு எழுந்துள்ளது. தற்போதைய நிலையில்,  புனேவைச் சேர்ந்த சீரம் என்ற தனியார் நிறுவனமும், ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இதனால் நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டு நிறுவனம் மட்டும் தடுப்பூசி தயாரித்தால் டிசம்பர் மாதம்தான் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு நிறுவனங்களுக்கும் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில்முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரேவும், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் , தடுப்பூசி தயாரிக்க மேலும் பல மருந்து நிறுவனங்களுக்கு மோடி அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில்,  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஆன்லைனில் பேசிய மத்திய  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குறைந்த பட்சம்   10 நிறுவனங்களுக்காவது கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க அனுமதி கொடுத்து, தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும். இதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆய்வுக்கூடங்கள் தடுப்பூசியை தயாரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது,  அவர்களுடன் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நாட்டிற்கு தேவையானது போக எஞ்சியவற்றை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் மூலம் தடுப்பூசி பிரச்னையும் தீரும்” என்று கூறினார்.

நிதின் கட்கரியின் கருத்தை,“ அவரது முதலாளி(நரேந்திரமோடி) கவனிப்பாரா” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.