கமதாபாத்

குஜராத் அரசு அறிவிப்பதை விட அதிகமான எண்ணிக்கையில் கொரோனா மரணம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நாடெங்கும் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன.  நேற்று வரை 1,53,14,714 பேர் பாதிக்கப்பட்டு 1,80,550 பேர் உயிரிழந்ததாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  அதே வேளையில் ஒரு சில மாநிலங்கள் மரண எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  அவற்றில் குஜராத் மாநிலமும் ஒன்றாகும்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் வசிக்கும் ரூபால் தக்கார் என்னும் 48 வயது பெண்மணி கொரோனா பாதிப்பால் உடல்நலம் குன்றி ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.  அவருக்கு கொரோனா குணமாகவில்லை என கூறப்படுகிறது.  ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று அவர் மரணம் அடைந்தார்.  அவருக்கு திடீர் மாரடைப்பால் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி மட்டும் குஜராத் மாநிலத்தில் 78 பேர் உயிர் இழந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வடோதரா, காந்திநகர், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் ஆகிய 7 நகரங்களில் 689 சடலங்கள் எரியூட்டவும் புதைக்கவும் செய்யப்பட்டுள்ளன.  இதில் அகமதாபாத் சிவில் மருத்துவமனையிலிருந்து மட்டும் 200 சடலங்கள் வந்துள்ளன.

ரூபால் தக்கார் போல மற்றொரு 58 வயதுடைய ஆண் ஒருவர் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   அவரது மகன் மவுலின் பஞ்சால் என்பவர், “எனது தந்தை தனது 58 ஆம் வயதில் கொரோனாவால் மரணம் அடைந்தார்.  ஆனால் மருத்துவமனையில்  அவரது சிறுநீரகங்கள் கடும் நீரிழிவால் பழுதடைந்து மரணம் அடைந்துள்ளதாகச் சான்றிதழ் அளித்துள்ளனர்” என கூறி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் தற்போது கொரோனா குறித்து இரு வகையான விவரங்கள் வெளியாகின்றன. அவற்றில் ஒன்று மாநில அரசின் சுகாதாரத்துறை வெளியிடுகிறது.  மற்றொன்று மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளில் இருந்து வெளியாகின்றன.   இரண்டு விவரங்களுக்கும் இடையில் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

கொரோனா பரவலின் முதல் அலை நிகழ்ந்த போது மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.   அதையொட்டி அரசு தரப்பில் இருந்து கொரோனா பாதிப்பு மட்டும் உள்ளவர்களை மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையில் சேர்க்கவும் மற்றவர்களைச் சேர்க்க வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   எனவே தற்போது இணை நோய்கள் உள்ள கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தால் அதை கொரோனா மரணமாகக் கணக்கெடுக்கப் படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ”குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதல் படி கணக்கெடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.