சென்னை: கொடநாடு விவகாரத்தில் ராஜேஸ்குமார் நாவலை விட அதிக மர்மங்கள் நிறைந்துள்ளதால், சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக பயப்படுகிறது என  காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார்.

கோடநாடு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது விதி எண் 55ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி   காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை அவைத்தலைவரிடம் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதையடுத்து, சட்டப்பேரவையில் கோடநாடு விவகாரம் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  கூறியதாவது, கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி கிடைக்க உதவுங்கள், சட்டப்பேரவையில் குரல் கொடுங்கள் என அதிமுகவினர் தன்னிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த விஷயத்தில் கடந்த அதிமுக அரசு, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான மனோஜும், சயானும் 90நாளில் பிணையில் வெளியே வந்துவிட்டனர்.

ஆனால், டெல்லி சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள்   எதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்? எதற்காக ஒரு பத்திரிகையாளர் அதனை ஆவணப்படமாக எடுத்தார்? எதற்காக சென்னை காவல்துறை புதுடெல்லி விரைந்தது? எதற்காக அவரைக் கைது செய்தது? எதற்காக அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு அதிமுக அரசு பதில் தெரிவிக்கவில்லை.

இதனால்தான், கொட்நாடு விவகாரம் குறித்து  நாங்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விதி எண்: 55-ன் கீழ் கொடுக்கிறோம். இதை விவாதிக்க வேண்டும். விவாதிக்க முடியவில்லையென்றால் அதனைச் சொல்ல வேண்டும்.  தைரியம் இருந்தால், இதுகுறித்து விவாதிக்கத் தயார் என்று அதிமுக சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து, பத்திரிகையாளரைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் இது தேவையில்லாதது எனச் சொல்ல என்ன காரணம்?  உண்மை ஒரு நாள் வெளியில் வரும். கொடநாடு விவகாரத்தில் கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் நாவலைவிட அதிகமர் மங்கள் நிறைந்துள்ளது .அதுகுறித்துபதிலளிக்காமல், அதிமுக அஞ்சுவது ஏன்?

சட்டப்பேரவையில் இதனை விவாதிக்க அதிமுக தயங்கினால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. அவர்களை நாங்கள் விவாதத்துக்கு அழைக்கிறோம். அதிமுக எதற்கு அச்சப்படுகிறது என்பதுதான் கேள்வி”.

இவ்வாறு அவர் கூறினார்.