சென்னை: பால சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் புகார்கள் வந்துள்ளதாகவும். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பால சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் , ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடை அணிந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கவே அவர் பல மாணவிகளிடம் பாலியல் சேட்டை ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது மேலும் சிலர் புகார்கள் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறதுழ.
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது, ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளது. அவர் மீது பலர் புகார்கள் கொடுத்துள்ளனர். மேலும் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில்(மகரிஷி வித்யா மந்திர்) இது போன்ற பாலியல் புகார்களை மாணவிகள் அளித்துள்ளதாகவும், அந்த பள்ளியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது. இனிமேல், ‛ஆன்லைன் வகுப்புகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.