சென்னை,
தமிழகத்தில் மேலும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறக்க முதல்வர் நிதி ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றைய மன்ற கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நடப்பு ஆண்டில் மேலும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறக்க முதல்வர் நிதி ஒப்புதல் வழங்கியுள்ளதாவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 30 படுக்கை வசதிகள் கொண்டு வரப்படும் என்றும், 17 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,924 மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறினார்.