135 பேரை பலி வாங்கிய மோர்பி பால பராமரிப்பு நிறுவன உரிமையாளர்களை கைது செய்யாதது ஏன் ? என்ற கேள்வி பெரிதாக எழுந்து வரும் நிலையில் இந்த பாலத்தை பராமரிக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள மச்சு ஆற்றின் மீது தொங்கிக் கொண்டிருந்த மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது தொடர்பாக அளவுக்கு அதிகமாகன பார்வையாளர்களை பாலத்தின் மீது அனுமதித்ததற்காக அங்கு பணியில் இருந்த டிக்கெட் கௌண்டர் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், 143 ஆண்டு பழமையான இந்த பாலத்தை பராமரிப்பதற்காக ஓரிவா குழும நிறுவனத்திற்கு 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இந்த பாலத்தை சீரமைப்பதாக கூறி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்து வந்த இந்த நிறுவனம் பாலத்தை முறையாக சீரமைக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பால பராமரிப்பு பணிக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வேலையை மட்டுமே செய்திருப்பது அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

மேலும், இந்த பராமரிப்பு பணியை சப்-காண்ட்ராக்ட் மூலம் வேறு நிறுவனங்களை ஈடுபடுத்தி செய்ததால் இதற்கான அசல் செலவினம் 12 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உயிரிழப்பு அனைத்திற்கும் அங்கு டிக்கெட் கொடுத்தவர்கள் மட்டுமே காரணம் என்பது போல் சித்தரித்து வரும் நிலையில் சீரமைக்கப்படாத பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதித்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட யாரையும் இதுவரை கைது செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிறு புண்ணை கூட குரங்கு போல் சொரிந்து சொரிந்து பெரிதாக்கும் நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழ்ந்த இந்த மாபெரும் துயர சம்பவத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்யாமல் இருப்பது எந்த மாதிரியான அரசியல் ஆதாயம் தேடுவதற்காக என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.