டெல்லி: உத்தரகாண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியது முதலே வட மாநிலங்களில் மழை கொட்டி வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி வரலாறு காணாத அளவில் வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும், அரியாணா, ராஜஸ்தானில் பெய்துவரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்ரத யமுனை ஆறு தலைநகர் டெல்லி வழியே செல்கிறது. இதனால், யமுனை ஆற்றங்கரையோர குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், டெல்லி நகரப்புகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதேபோன்று ஹிமாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய 2 மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரக்ண்ட் மாநிலத்தில் ஜூலை 15, 16 ஆகிய இரு தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.