சென்னை: பருவமழை பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் உருவாகியுள்ள காற்றாழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் , இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள், நிவாரணப் பணிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல், குறித்த பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.