சென்னை: கோவில் அர்ச்சகர்களுக்கு  அரிசி, மளிகை பொருட்களுடன் ரூ.4,000 உதவித்தொகையை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, திருக்கோயில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோயில் ஊழியருக்கும் ரூ.4,000/ உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பாராட்டு தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அவரது டிவிட்டில்,  திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்-பட்டாச்சாரியார்கள்-பூசாரிகள்,பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu அவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன் என தெரிவித்து உள்ளார்.