நெட்டிசன்:
அருண் நெடுஞ்செழியன் ( Arun Nedunchezhiyan) அவர்களின் முகநூல் பதிவு
1 வங்கியும் நிதி மூலதன ஒன்றுகுவிப்பும்:
நிலவுகிற சமூக அமைப்பினில்,பணம் – பொருள் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது.வங்கி,பணப் பரிவர்த்தனைக்கான இடைத்தரக வேலையை செய்கிறது.
பணமும் வங்கியும் முதலாளியப் பொருளாதாரத்தை சமூகமயப்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
இந்தியா போன்ற அரை தொழில்மய நாடுகளில்,ரொக்கப் பணமே பொருள் பரிமாற்று சாதனமாக 95 விழுக்காட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.ஆனாலும் இந்த ரொக்கப் பணம்,அதாவது இந்த பண மூலதனம் முழுவதும், மையப்படுத்தப்பட்ட வகையில்,இந்திய முதலாளிய அரசு இதுவரை திரட்டியது இல்லை.
bank2
ஒட்டுமொத்த சமூகத்தின்,பணப் பரிவர்த்தனை மீதான தனது கட்டுப்பாட்டை,அதாவது மையப்படுத்தப்பட்ட வகையில் நிதி மூலதனத்தை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது இந்தியாவைப் பொறுத்துவரை சவாலான காரியம்.
ஏனெனில், கிராமப்புற பொருளாதாரத்தில் வங்கிகள், தபால் நிலையங்களின் ஊடாக,கிராம மக்களை தனது முதலாளிய பொருளாதாரத்தில் கொண்டு வருவது எளிதான காரியம் இல்லை.ஏனெனில் பணப் பரிவர்த்த னைக்கு வங்கிகளை பயன்படுத்துகிற வகையில் இந்திய கிராமப் பொருளாதார உறவுகள் வளர்ச்சியுறவில்லை.
நகரங்களில் நிலைமை வேறு,கூலிக்கு உழைப்பை விற்கிற நகர்ப்புற உழைப்பாளிகளின் கூலியானது, வங்கிகளின் ஊடாகவே பெரும்பாலும் நடைபெறுகிறது.சேமிப்புத் திட்டங்களால் கவரப்பட்ட வைப்பு நிதிகளும், மாத சம்பளமும் வங்கிகளை மையமிட்டே நடைபெறுகிறன.
நகர்ப்புற மக்களின் நிதி மூலதனம் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு,கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. ஆளுவர்க்கத்திற்கான சிக்கல், இந்தியாவின் அரை நகரங்கள்,கிராமங்களின் மையப்படுத்தப்படாத சிறு குறு வியாபார சந்தையில் புழங்குகிற ரொக்கப் பணத்தை எவ்வாறு ஒன்று திரட்டுவது,என்பதில் வேர் விட்டுள்ளது.
தொகுத்துக்கூறின் இந்தியாவின்,வளர்ச்சியுறாத கிராமப் பொருளாதார உற்பத்தி உறவுகளை அதன் மூலதனத்தை எவ்வாறு முதலாளியப் பொருளாதார வலைப்பின்னலில் கொண்டு வருவது என்பதே.இதை களைவதற்கான உத்திகளை இந்த அரசானது, கடந்த பல காலமாக முயற்சித்து வருகின்றது .
arun
கடந்த காலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஊடாகவும்,தற்போது பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் ஊடகாவும்,உதிரியாக அமைப்பிற்கு வெளியே, வங்கிகளின் கட்டுப்பாட்டிற்குள் வராத ஒவ்வொரு குடிமகனையும் மையப்படுத்தப்பட்டுள்ள நிதி மூலதன வலையத்திற்குள்ளாக கொண்டு வர முயற்சித்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பன்னாட்டு நிதியகத்தின் கூட்டத்தில், இந்தியாவின் பன்னாட்டு நிதியகப் பிரதிநிதி அருண் ஜெட்லி வழங்கிய அறிக்கை இதை மெய்ப்பிகிறது.பன்னாட்டு நிதியகத்தின் நிதிக் கமிட்டியிடம் வழங்கிய அறிக்கையின் பக்கம் 6 ல்,அருண் ஜெட்லி கூறுவதாவது,
“கடந்த 2014 ஆம் ஆண்டு முதலாக ஒவ்வொரு இந்தியக் குடும்பங்களையும் இந்தியாவின் நிதிப் பரவலில் சேர்த்துக்கொள்ளும் வகையில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன் மூலமாக 24 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன” என்கிறார்.
தற்போது விஷயத்திற்கு வருவோம்,மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத என்ற அறிவிப்பிற்குப் பின் வங்கியில் கணக்கு வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தவிர்க்க இயலாத கடமை என்ற கருத்துரு வாக்கம்,கிராம சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிக் கணக்கின் அவசியம் பாரீர் என்ற கருத்தியில் மேலாண்மையை கிராம சமூகத்தின் பொது புத்தியில் ஊடுருவலை நிகழ்த்துகிறது.உதிரிப் பிரிவினர் அனைவரும் வங்கிகள் எனும் மையக் கட்டுப்பாட்டில் வரவைக்கப்படுகின்றனர்.மூலதனம் குவிமையப்படுத்தப்படுகிறது.
நகரை பொறுத்துவரை இந்த நெருக்கடி காலகட்டத்தில்(ரூபாய் நோட்டு செல்லாது) வேறொரு கருத்தியல் தாக்குதலை அரசு நிகழ்த்துகிறது.அதாவது, புழக்கத்தில் உள்ள ரொக்கப் பண வடிவிலான பொருள் பரிவர்த்தனைக்கு மாற்றாக,பணமற்ற வடிவிலான வைப்பு/பற்று/ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்த அருண் ஜெட்லி அறிவுறுத்தி வருவதையும் இதோடு இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.
சாலையோர வியாபரிகள்,குறு சிறு வணிகர்களுடன் சுற்றில் இருக்கும் ரொக்கப் பணப் புழக்கம் இதன் ஊடாக அகற்றப்படும்.அதேநேரத்தில் பணப் புழக்க சுற்றோட்டத்தில், ரொக்கப் பணமானது கையிருப்பாக கைகளில் தேங்குவதை அகற்றிவிடுகிறது.
bank1
2 இந்திய வங்கிகளின் நிதி மூலதன திவால் நிலையும்,மோடியின் பொருளாதார பயங்கரவாதமும்:
தற்போது 500/1000 ரூபாய் செல்லாத என்ற மோடியின் அறிவிப்பின் பின்னாலுள்ள முக்கிய பொருளாதார காரணிக்கு வருவோம்.இந்த அறிவிப்பை மேலோட்டமாக அரசியல்பாற்பட்ட அறிவிப்பாக கருதாமல் அதன் அடித்தளமான பொருளாதாரக் கூறுகளில் கவனத்தை செலுத்த வேண்டும்.
எனவே இச்சிக்கல் தொடர்பான நமது பொருளாதார பகுப்பாய்வை,இந்திய நிதி மூலதனத்தை கட்டுப்படுத்துகிற வங்கிகளில் மோசமான “நிதி மூலதன இருப்பு” நிலையில் இருந்து தொடங்குவோம்.
இந்தியாவில் மொத்தம் 25 பொதுத்துறை வங்கிகளும்,25 தனியார் வங்கிகளும் ,43 வெளிநாட்டு வங்கிகளும் 56 மாநில வங்கிகளும் 1589 நகர் கூட்டுறவு வங்கிகளும் 93,550 கிராம கூட்டுறவு வங்கிகளி, செயல்படுகிறது.இந்த வங்கிகளின் முக்கிய நோக்கம் மேற்குறிப்பிட்டவாறு நிதி மூலதனத்தை கட்டுப்படுத்துவது,பெரு முதலாளிக்கு உபரியை பெருக்கித் தருவது.
வங்கிகள் என்பது பொது மக்களுக்கு சேமிப்பு வழங்குவது என்ற அம்சத்திலேயே பெரும்பாலான புரிதல்கள் உள்ளன.உண்மைதான்,அதோடு தொழிற்துறை முதலீடுகளுக்கு கடன் வழங்குவது,பங்குகளை வாங்குவது விற்பது,கடன் பத்திரங்களை வழங்குவது என தொழிற்துறை சார்ந்த நிதி மூலதன பரிவர்தனைகளே வங்கிகளின் பிரதான செயல்பாடாக உள்ளது.
வெளியில் சேமிப்பு வங்கி,கடன் வங்கி என்ற வகைமையில் வேறுபட்டாலும் நிதி மூலதனம் என்ற வகையில் அது ஒன்றாகவே அடிப்படையில் ஒன்று கலக்கப்படுகிறது.
இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை முதன் முதலாக நவதாரளமயமாக்கல் கட்டத்தில்,90 களில் hdfc என்ற முதல் தனியார் வங்கி திறக்கப்பட்டது முதல் இன்று வரை பல பாகாசுர வங்கி நிறுவனங்கள்,சிறு வங்கிகளை முழுங்கி பெரும் நிதிமூலதன நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளன.பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த சந்தையில் 80 விழுக்காட்டை கட்டுக்குள் வைத்துள்ளது.
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் வங்கிகளே பொருளாதாரத்தின் இதயமாக உள்ளது.இந்தப் பின்புலத்தில் இந்திய வங்கிகளின் நிதி இருப்பு மூலதனம் குறித்தும் அதன் ஆரோக்கிய நிலைமை குறித்தும் நமது கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.
குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திய பொத்துறை வங்கிகள், தொழில்நிறுவனங்களுக்கு வழங்கிய கடன்கள் அதிவேகத்தில் உயர்ந்துள்ளது.குறிப்பாக 2008 ஆம் ஆண்டு கால பொருளாதார மந்த கட்டத்திற்கு பின்பாக இந்திய பொருளாதாரத்தை உயர்த்த, முதலீடுகளை உயர்த்த இந்த கடன்கள் அவசியமாக அரசு கருதியது.அதன் விளைவாக,இன்று வங்கிகளுக்கு வர வேண்டிய வாராக் கடனின் மதிப்பு சுமார் 8 லட்சம் கோடி ருபாயை தொட்டுள்ளது.இந்த மதிப்பான இலங்கை,ஓமன் போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த மொத்த உற்பத்திக்கு சமமாக உள்ளது.
• மொத்தமுள்ள 25 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகளில் லாப வீதம் மிக அதிகமாக 93 விழுக்காடு வரை மோசமாக சரிந்துள்ளதாக மூன்றாம் காலண்டுகால(Q3) தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.
• தனியார் வங்கிகளை விட மூன்று மடங்கு அதிகமாக பொத்துறை வங்கிகள் வாரக் கடன் நிலுவைத் தொகை உள்ளது.
• கடந்த பத்து ஆண்டுகளில் வங்கிகளின் செலவு வீதத்தை விட வரவு வீதம் தடாலடியாக குறைந்து வருகிறது.
modi
ஒரு வங்கியின் ஆரோக்கிய நிலைமைக்கு அதன் நிதி மூலதன வைப்பு நிதிக்கும் செலவுக்குமான வீதம் சுமார் 9 விழுக்காட்டிற்கு கீழ் குறையாமல் இருக்க வேண்டும்.இது பன்னாட்டு நிதியகம் உலக வங்கிகள் அனைத்திற்கும் நிர்ணயத்திருக்கும் பொது வரம்பு.சில புற சந்தை விளைவுகளை கவனத்தில் கொண்டால் இந்த வீதம் 12 விழுக்காட்டிற்கு கீழாக சரியக் கூடாது என்கிறது.இந்த வீதம் capital adequacy ratio என அழைக்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி,இந்திய வங்கிகளுக்கு இந்த வீதம் 12 விழுக்காட்டிற்கு கீழாக சரியக் கூடாது என வரையறுத்து உள்ளது.தற்போது.இந்திய பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை கடந்த 2015 மார்ச் மாதத்தில் இந்த வீதம் 12 விழுக்காடாக சரிந்தது.தனியார் வங்கிகளின் வீதம் 16 விழுக்காடாக சரிந்தது.
இதே போக்கு தொடர்ந்தால் வங்கிகள் நிதி மூலதனம் இல்லாமல் திவால் நிலைமைக்கு தள்ளப்படும்.வங்கிகளில் பணத்தை திரும்ப எடுக்க முடியாது,ஏடிஎம் களில் பணம் இருக்காது, பொருட்களின் விலை திடுமென எகிறும், பெரும் குழப்பமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். அண்மைய காலங்களில் இவ்வாறன நெருக்கடிகள் உலக அளவில் அதிகரித்தும் வருகிறது.இதற்க்கு தீர்வாக அரசு வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்கி சரி கட்டும்.
ஒரு வங்கி எப்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது குறித்து உலக வங்கியின் வரையறை வருமாறு,
• வங்கிகள் வழங்கிய கடன் நிலுவைத் தொகை அல்லது சொத்துக்கள் அதிகரிப்பது
• இருப்பில் உள்ளதைவிட சுற்றோட்டத்தில் பணம் அதிகரிப்பது.வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வரவை விட,வங்கிக்கு வெளியே அதிக பணம் புழங்குவது
• வங்கி வழங்குகிற வட்டி வீதம் அதிகரிப்பது,கடன் பத்திரங்களின் மதிப்பு குறைவது.இது ஒருகட்டத்தில் வங்கிகளில் முதலீடு செய்ததைவிட,அதிக தொகைகளை வங்கி வழங்குவதற்கு வித்திடும்.
இந்திய வங்கிகளைப் பொறுத்தவரை அதன் கடன் நிலுவைத் தொகை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துவருவது பட்டவர்த்தமாக தெரிந்த விஷயம்தான்.
இந்த நெருக்கடி நிலையை முன்னுனர்ந்த இந்திய அரசு,இந்திய வங்கிகளுக்கு சுமார் 20,000 கோடி ருபாய் வழங்குகிற அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.மேலும் 2018 ஆம் ஆண்டுக்குள் 70,000 கோடி ரூபாய் வழங்குவதாக உத்தேசித்துள்ளது.
ஆனால் சிக்கலை தீர்க்க இந்தப் பணம் போதாது.மேலும் பொதுமக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வங்கிகளுக்கு மட்டுமே வாரி வாரி வழங்குவது என்பது அதன் இதர பொது சுகாதார கல்வி செலவுகளுக்கு செலவிடுகிற தொகையை கட்டுப்படுத்திவிடும்.
ஆக, தீர்வென்னவென்றால்,ஒட்டுமொத்த பண புழக்கத்தில் வாராக் கடனாக வெளியிலுள்ள, பெரு முதலாளி களுக்கு  கடனாக சென்ற பணம் மீண்டும் வங்களுக்கு இருப்பாக திரும்ப வேண்டும்.இது ஒன்றே இந்திய வங்கிகளை மீட்கிற வழி.இதை செய்யவே ரகுராம் ராஜன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
நாம் முதலில் குறிப்பிட்டவாறு,இந்த இடத்தில் நிதி மூலதனத்தை வங்கிகளின் ஊடாக கட்டுப்படுத்துகிற கும்பலுக்கும் தொழில்துறை முதலாளிகளுக்குமான மோதல் பட்டவர்த்தமாக வெளிப்படுகிறது.
இந்திய நிலைமைகளில் இந்த மோதல் ரகுராம் ராஜன்,பன்னாட்டு நிதியகம்,வங்கிகள் Vs மோடி, இந்தியப் பெரு முதலாளிகள் என வெளிப்பட்டது.
ராஜன் என்ற பன்னாட்டு நவ தாராளமய முதலாளிய பொருளாதார சிந்தனைக்கும்,உள்நாட்டு வணிக மரபின் எச்சங்களை துடைத்தெறியாத முதலாளிய ஆளும் வர்க்கத்திற்குமான மோதலாக உருப்பெறுகிறது.
இறுதியில் இந்திய முதலாளிய ஆளும் வர்க்க சக்திகளே வெற்றி பெற்றதை நாமறிவோம்.ஆனாலும்,2008 ஆம் ஆண்டில் லே மென் வங்கி திவாலை மீட்க,அமெரிக்கா தடுமாறியது,அது மேலும், நெருக்கடிக்கு வித்திட்டதை மறுக்காத இந்திய ஆளும்வர்க்கம், இந்த இடத்தில ஏதேனும் செய்தே ஆக வேண்டிய நெருக்கடி வலைக்குள் சிக்கித்தவித்தது.
அம்பானி, அதானியிடம் கடனை வசூலிப்பது என்பது அதன் கனவிலும் செய்ய இயலாத காரியம்,அரசிடமோ போதுமான வகையில் வங்கிகளுக்கு வழங்க நிதி இல்லை. என்ன செய்வது, உதிரியாக சுற்றோட்டத்தில் சேமிப்பாக, சிறு,குறு தொழிலில் புழங்குகிற ரொக்கப் பணத்தை வங்கிகளுக்கு உறிஞ்சி எடுப்பது என்ற அயோக்கியத்தன முடிவுக்கு வந்தது.
arun-jaity-modi
அதை எவ்வாறு செய்வது?இருக்கவே இருக்கிறது கள்ளப் பணம் ஒழிப்பு,கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் 500/100 ருபாய் செல்லாது என்ற அறிவிப்பில்,புழக்கத்தில் உள்ள 14 லட்சம் கோடியை உள்வாங்குவது.வங்கிகளின் திவால் நிலையை காப்பாற்ற தொழிலதிபர்களை காப்பாற்ற மக்களை ஏமாற்றி பணத்தை பிடுங்குவது.
இந்த அறிவிப்பு என்பதே ஒரு முதலாளிய அரசின் உச்சகட்ட முட்டாள்தனத்தின்,வர்க்க சார்பான பண்புகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.
ஏன் முட்டாள்தனம் என்று நாம் சொல்கிறோம் என்றால் சுற்றோட்டத்தில் உள்ள ரொக்கப் பணம் வங்கிக்கு வரவாக வந்து மீண்டும் செலவாக செல்வதில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளமுடியும் என இந்த முட்டாள் அரசு நம்புகிறது.அதை வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்கமுடியும்.
இரண்டாவதாக,வாரக் கடனை இந்தியப் பெரு முதலாளிய வர்க்கத்திடம் இருந்து வசூலிப்பதற்கு மாறாக அதனிடம் மண்டியிட்டுள்ளது,
அரசின் இந்த வர்க்கசார்பான பண்பை பொதுமக்கள் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் இந்தியாவின் ஜனநாயகம் முதலாளிய வர்க்கத்திற்கான ஜனநாயகமாக உள்ளது என்பதை மோடி அரசு மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளது.