சென்னை
தினத்தந்தி பவள விழாவில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.
இன்று நடந்த தினத்தந்தி நாளிதழின் பவழ விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் அவருடன் கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நிர்மலா சீதாரமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர் . முதல்வர் தனது உரையில் பிரதமர் மோடி இந்தியாவை புதுயுகத்துக்கு எடுத்துச் செல்வார் என புகழ்ந்தார். தினத்தந்தி பவள விழா மலரை மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி உரையாற்றும் போது, “அனைவருக்கும் வணக்கம் (இது மட்டும் தமிழில்). நான் சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்துவரும் மழை குறித்த விவரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆறுதலையும் மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்னும் தகவலையும் தெரிவிக்கின்றேன். தற்போது பல செய்தி சேனல்கள் உள்ளன. ஆனால் இன்னும் மக்கள் காலையில் காஃபி அல்லது டீயுடன் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை விடவில்லை. பத்திரிகை என்பது செய்திகளை தருவது மடுமின்றி திசைகளையும் உலகத்தையும் காட்டும் கருவியாக உள்ளது. பத்திரிகைக்கு ஜனநாயகத்தில் ஒரு முக்கிய பங்கு உண்டு. பல மொழிகள் பேசப்படும் இந்த மாபெரும் நாட்டில் மாநில மொழிகளில் பத்திரிகைகள் வருவது மிகவும் அவசியம்.
ஊடகத்துறையில் தற்போது தொழில்நுட்பம் அபாரமாக வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. பத்திரிகைகள் என்பது மக்களுக்காக என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பத்திரிகைகளின் கவனம் அரசைச் சுற்றி மட்டும் அல்ல, மக்களைச் சுற்றியும் இருக்க வேண்டும். இந்திய அரசின் திட்டங்களான தூய்மை இந்தியா போன்ற திட்டங்களுக்கு பத்திரிகைகள் தங்கள் உதவியை அளிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.