டில்லி

பிரதமர் மோடியின் பிடிவாதத்தால் மரணமடைந்த வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புல்வாமா நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே அரசு இந்த தியாகிகள் அந்தஸ்தை அளித்து வருகிறது. அதனால் திவிர வாத தாக்குதலில் மரணம் அடையும் துணைநிலை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல சலுகைகள் மற்றும் உதவித் தொகை கிடைப்பதில்லை.

அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். அவர் தனது டிவிட்டரில், “சிஆர்பிஎஃப் போன்ற துணைநிலை ராணுவ வீரர்களின் தியாகத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் பிரதமர் தனது பிடிவாதத்தால் என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. துணை நிலை ராணுவ வீரர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவையாவது அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்” என பதிந்துள்ளார்.

சென்ற வாரம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தீவிர வாத தாக்குதலில் மரணமடையும் துணைநிலை ராணுவ வீரர்களுக்கும் தியாகிகள் அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.