லக்னோ: பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடி, தனது ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து வைத்ததாக கூறி, லக்னோ விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
ஆனால், அவரின் குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
தன்னை, தனது ஆதரவாளர்கள் நெருங்க முடியாதபடி தடுத்து, அவர்களை, காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டனர் என்று குற்றம் சாட்டிய பிரஹ்லாத் மோடி, அதனை எதிர்த்து விமான நிலைய வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
அவர் கூறியதாவது, “எனது ஆதரவாளர்களை தடுத்து வைப்பதற்கான உத்தரவு, பிரதமர் அலுவலத்திலிருந்து வந்ததாக காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். நான், அந்த உத்தரவின் நகலை காட்டுமாறு கூறினேன். ஆனால், அவர்கள் அப்படியான எந்த நகலையும் எனக்கு காட்டவில்லை. எனவே, தர்ணாவில் ஈடுபட முடிவு செய்தேன்” என்றார் அவர்.
பின்னர், அவர் அந்த இடத்திலிருந்து 1.5 மணிநேரங்கள் கழித்து புறப்பட்டு சென்றார். சுல்தான்பூர், ஜான்பூர் மற்றும் பிரதாப்கர் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக, தான் உத்திரப்பிரதேசம் வந்ததாக தெரிவித்தார் பிரஹ்லாத் மோடி.