டெல்லி: பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் 3வது முறையாக பதவி ஏற்க உள்ள நிலையில், ஜூன் 7-ல் பாஜக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

18வது மக்களவைக்கான தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதி பெரும்பான்மை பெறாத நிலையில், 240 இடங்களை பெற்ற பாஜக, தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று ( 5ந்தேதி) நடைபெற்று முடிந்தது.
இதைத்தொடர்ந்து வரும் 8ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதைத்தொடர்ந்து, வரும் 7ந்தேதி (நாளை) தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலுமை, இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது, மக்களவை குழுத் தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி உரிமை கோருவார்.
ஜூன் 8-ல் மோடி பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று (ஜூன் 5) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். குடியரசுத் தலைவர் மோடியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும், மத்திய அமைச்சர்கள் குழுவையும் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]