சில நாட்களுக்கு முன்பு, நியூஸ் நேஷன் சேனலுக்கு அபூர்வமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, மேகங்களில் மறைந்தபடி போர் விமானங்கள் பறந்தால், எதிரி நாட்டு ராடார்களில் சிக்காமல் தாக்குதலை நடத்திவிட்டு, பத்திரமாக திரும்பி விடலாம் என்று நிபுணர்களுக்கு, தான் ஆலோசனைக் கூறியதாக திருவாய் மலர்ந்து, சமூகவலைதளங்களில் பெரும் கிண்டலுக்கு ஆளானார் என்பதை அறிவோம்.

ஏனெனில், மோடியின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாது என்பது நாம் அறிந்ததே. எனவே, சமூகவலைதளங்கள்தான் பலருக்கும் ஒரே வழி.

அந்த நேர்காணலில் மோடி, விமானம் – ராடார் தொடர்பான முத்துக்களை மட்டுமே உதிர்த்துவிடவில்லை. இன்னும் சில அதிசயமான மற்றும் மயிர்க்கூசும் விஷயங்களையும் கூறி, நமது பிரதமர் இப்படிப்பட்டவரா? என்று மக்களை ஆனந்த கண்ணீர் சிந்த வைத்தார்.

அவர் நிகழ்த்தியதாக கூறிய சில அற்புதங்கள்…

* கடந்த 1988ம் ஆண்டு, டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்திய இந்தியாவின் முதல் மனிதர்களுள் நானும் ஒருவன். டிஜிட்டல் கேமராவை வைத்து, பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை வண்ணப் படம் எடுத்தேன்.

* இமெயில் எனப்படும் மின்னஞ்சலை, கடந்த 1988ம் ஆண்டே நான் பயன்படுத்த தொடங்கினேன்.

சரி, இதிலென்ன பிரச்சினை? அவர் அப்படி பயன்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதானே என்கிறீர்களா? அவர் அப்படி பயன்படுத்தியிருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் காலகட்டம்தான் நம் மூளையில் பலமாக இடிக்கிறது. ஏன் என்கிறீர்களா?

* டிஜிட்டல் கேமரா முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு 1990.

* இமெயில் எனப்படும் மின்னஞ்சல், உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1995.

ஆக, இங்கே நிகழ்ந்திருக்கும் அதிசயம் என்னவென்றால், ஒரு கண்டுபிடிப்பு உலகில் அறிமுகம் செய்யப்படும் முன்னதாகவே, அதைப் பயன்படுத்திய அற்புதங்களை செய்திருக்கிறார் நரேந்திர மோடி!

இப்படியெல்லாம் நமது பிரதமர் அடித்துவிட்டால், அதை பல ஊடகங்கள் வேண்டுமானால் விசுவாசமாக தவிர்த்து விடலாம். ஆனால், சமூக வலைதளவாசிகள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன?

மோடியின் இந்தப் புழுகல், நாட்டிற்கு ஏற்பட்ட தர்ம சங்கடம் என்று பலரும் தெரிவித்துள்ளனர். சிலரோ, மோடிக்கு மன வியாதி வந்துவிட்டது; அதனால் அவருக்கு உடனடியாக நல்ல சிகிச்சை தேவை என்று பதிவிட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாயில் வந்ததையெல்லாம் வரலாறு என்று இவர் பேசியதையும், 2013ம் ஆண்டு உத்ரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய குஜராத் மாநிலத்தவர்களை, மாநில முதல்வர் என்ற முறையில் ஒரேநாளில் சென்று மீட்டு வந்ததாக செய்தி பரப்பியதையும், தன் அரசின் சாதனைகளாக பொய்யாக ஃபோட்டோஷாப் வேலைகள் செய்துவிட்டதையும் தொடர்ச்சியாகப் பார்த்து சலித்தவர்கள்தான் நாம்.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்துகொண்டு , இப்படியெல்லாம் ஒரு மனிதர் பேச முடியுமா? என்பதுதான் சமூக வலைதளவாசிகளின் ஆதங்கமாக உள்ளது.

எது எப்படியிருந்தாலும், பிரதமரின் இத்தகைய புரட்டல்களையும் மகிழ்ச்சியாக விளம்பரப்படுத்தவே செய்வர் அவரின் ஆதரவாளர்கள் என்றும் நகைக்கிறார்கள் பலர்.

தெர்மாகோல் விஷயத்திற்காக தமிழகத்தின் செல்லூர் ராஜுவை இன்றுவரை தொடர்ந்து போட்டிபோட்டு வறுத்தெடுக்கும் அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் பிரதமர் மோடியும், அவரின் சகாக்களும் செல்லூர் ராஜுவை மிஞ்சி மேற்கொள்ளும் பல நடவடிக்கைகள் குறித்து எதற்காக வாயே திறப்பதில்லை? என்பதும் சில வலைதளவாசிகளின் ஆதங்கம்.

மோடி ஊடகங்களை மிக மிக அபூர்வமாக சந்திக்கும்போதே இப்படியான பயங்கர அதிசயங்கள் வெளிவருகிறதே, ஒருவேளை இவர் அடிக்கடி ஊடகங்களை சந்திக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும்..? என்ற சிலரின் கவலையும் நமக்குப் புரிகிறது.

– மதுரை மாயாண்டி