பெங்களூரு

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார்.

வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது.  கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.   நேற்றும் இன்றும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ்1, தி.மு.க., ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்,

“எதிர்க்கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். மொத்தம் 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘INDIA’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

விரைவில் மும்பையில் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என மோடி  அச்சம் அடைந்துள்ளார்.  எனவே அனைத்து அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் மீது மத்திய பாஜக ஆயுதமாக ஏவுகிறது”

எனத் தெரிவித்தார்.