விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  ரவிக்குமார்:
ம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘அம்பேத்கர் அரசியல் தீண்டாமைக்கு’ ஆளாக்கப்பட்டதாக வருந்தினார். அம்பேத்கரால்தான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தான் பிரதமராக முடிந்தது என்றார். ‘சமூகநீதிக் காவலர்கள்’கூட இப்படிப் பேசியதில்லை. அம்பேத்கரைப் புகழ்வதில் பாஜக ஆட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பிரதமருக்கு அரசியல் உள்நோக்கம் ஏதும் இருக்காது என அப்பாவிகள்கூட நினைக்கமாட்டார்கள். ஆனால் அப்படிச் சொல்லி அவர் பேசியதை ஒதுக்கிவிட முடியாது.
1
பிரதமராக இருக்கும் ஒருவர் அம்பேத்கரைப்பற்றியும் அரசியல் தீண்டாமையைப்பற்றியும் பேசும்போது நாடெங்கும் கொழுந்துவிட்டெரியும் சாதிவெறி நெருப்பின்மீது அந்தப் பேச்சு கொஞ்சம் தண்ணீரை ஊற்றுவதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஒரு டேங்கர் அளவுக்கு இல்லையென்றாலும் ஒரு வாளி அளவாவது இருந்தது. அரசியல் பிழைப்புக்காக அந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறவர்கள் பெருகிவிட்ட சூழலில் ‘ அட! இது பரவாயில்லையே!’ என்றுதான் தோன்றியது.
அப்படித்தான் ரஜினி கபாலி திரைப்படத்தின்மூலம் அம்பேத்கர், தலித் – குறித்துப் பேச யத்தனித்திருப்பதையும் பார்க்கத் தோன்றுகிறது.
தமிழ்ச் சினிமா உலகம் அரசியல் ‘தலைவர்களை’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இருந்ததுபோய் இப்போது சாதி தலைவர்கள் பெருக்கெடுக்கும் புற்றாக மாறிவருகிறது. இந்தச் சூழலில் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு வணிக சினிமாவிலிருந்து தமக்கு ஆதரவாய் சிந்துகிற சிதறுகிற ஒழுகுகிற ஒருசில பிம்பங்களும் வசனங்களும்கூட ஒரு தற்காலிக இளைப்பாறுதலை தலித் இளைஞர்களிடையே ஏற்படுத்துவதில் வியப்பேதுமில்லை.

ரவிகுமார்
ரவிகுமார்

இந்த இளைப்பாறுதலின் தொடர்ச்சியாக, அரசியல் தளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்த முழக்கங்களின் சாயல்களை கபாலியின் வசனங்களிலும் அதன் இயக்குனரின் பேட்டிகளிலும் தலித் இளைஞர்கள் கண்டுபிடித்துப் பூரிக்கின்றனர். ரஜினிக்குள் அம்பேத்கரைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர்.
பாஜகவைச் சேர்ந்த பிரதமர் பேசுவதன் பின்னே வேறொரு நோக்கம் இருக்கிறது என்பதை அவரது ஆட்சியில் தலித்துகள் நடத்தப்படும் நிலையோடு ஒப்பிட்டு எளிதாகப் புரிந்துகொள்ளும் தலித் இளைஞர்கள், கபாலியின் வசனங்களையும் பிம்பங்களையும் வணிக சினிமா ஏற்படுத்தும் விளைவுகளோடும், ரஜினியின் படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளோடும் ஒப்பிட்டுப்பார்த்துப் புரிந்துகொள்ள சற்றே தடுமாறுகிறார்கள் எனத் தோன்றுகிறது. அரசியல் புரிதல் கூர்மைப்பட்டிருக்கும் அளவுக்கு அவர்களது பண்பாட்டுப் புரிதல் கூர்மைப்படவில்லையென்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
அதைத் தாண்டி ஒரு ஆபத்தான அம்சத்தை இதில் பார்க்கிறேன். சாதி ஒழிப்பு அரசியலை ஏற்றுக்கொண்டிருந்த சிலர் சாதிப் பெருமிதத்துக்குப் பலியாகிவருகின்றனர். இதனால் கபாலி திரைப்படத்தின் இயக்குனர் தலித் என்பதால் அந்தப் படம் குறித்த சிறு அதிருப்தியை யார் வெளியிட்டாலும் அவர்களைத் தாக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
சாதிப் பெருமிதம் சாதியைக் காப்பாற்றுமே தவிர சாதியை ஒழிக்காது. இதுதான் அம்பேத்கரிடமிருந்து கற்கவேண்டிய முதல் பாடம்.
(முகநூல் பதிவு)