சென்னை:

சீன அதிபர், பிரதமர் மோடி ஆகியோர் நாளை தமிழகம் வர உள்ள நிலையில், அவர்களுக்கு வழி நெடுகிலும் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க தமிழகஅரசு  முடிவு செய்துள்ளது. அதன்படி வழி நெடுகிலும் 35 இடங்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதில், பிரபல நாட்டியப் பள்ளியான கலாசேத்ராவின் கதகளி நடனமும் இடம்பெறுகிறது. அத்துடன் பாரமபரிய கலைநிகழ்ச்சிகளும் பங்குபெறுகின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை (11-ந்தேதி) சென்னை வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக பிரதமர் மோடியும் நாளை சென்னை வருகிறார். சென்னை விமான நிலை யத்தில் சீன அதிபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அப்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சென்னை வரும் தலைவர்கள்,  கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலில் தங்கி சற்று ஓய்வெடுத்து விட்டு பிற்பகல் மாமல்லபுரம் பயணமாகிறார்கள்.

கிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே இரு தலைவர்களும் பயணம் செய்கிறார்கள்.  அவர்கள் செல்லும் ஈசிசூர் சாலை சுத்தப்படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வழி நெடுக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் சீன அதிபர்  அறிந்து கொள்ளும் வகையில் பல்ரவேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும், வரவேற்புகளும் கொடுக்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து இறங்கியதும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய வளாகத்துக்குள் கரகாட்டம், ஓயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதை சீன அதிபர் நடந்து சென்று பார்த்து ரசிக்கிறார்.

அதையடுத்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழிநெடுக 6 ஆயிரத்து 800 கல்லூரி மாணவ-மாணவிகள், சுய உதவிக் குழுவினர் மற்றும் அ.தி.மு.க.வினர் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பு அளிக்கிறார்கள். கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வட இந்தியாவில் புகழ்பெற்ற நாசிக் டோல் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

பின்னர், கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் 50 கி.மீட்டர் தூரத்துக்கு சாலையில்,  35 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்படுகின்றன.

ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகிறது. ஓட்டல் வாசலில் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடன் சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும், மத்திய கைலாஷ் அருகே மதுரை கரகாட்ட குழுவினரின் ஆடல் நிகழ்ச்சி. திருவான்மியூர் சிக்னல் அருகே செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படுகிறது.

கந்தன்சாவடியில் பேண்டு வாத்தியக்குழுவினரின் நிகழ்ச்சி, புலி ஆட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதை போல் வழிநெடுக வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைத்து சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடும் பகுதிகளான அர்ஜூனன்தபசு உள்பட பல இடங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

நாளை  பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.. அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை முதலில் பார்வை யிடுகிறார்கள். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கிறார்கள்.

பின்னர் மாலையில் கடற்கரை கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் மோடி, ஜின்பிங் பங்கேற்கிறார்கள். அங்கு பல்வேறு நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து கூறிய கலாச்சேத்ராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், காலக்ஷேத்ரா மாணவர்கள் பரதநாட்டியம் மற்றும் கதகளி நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாகவும்,  அதற்கான ஒத்திகைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

கலாசேத்ரா நிறுவனம் நிறுவனம் பல ஆண்டுகளாக சீனாவுடன் ஒரு வலுவான கலாச்சார தொடர்பைக் கொண்டுள்ளது என்று கூறியவர் ஏறக்னவே நான்கு முறை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல  நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் கூறினார்.

மேலும்,  “1985 ஆம் ஆண்டில், கலகேத்ராவின் நிறுவனர் ருக்மிணி தேவி அருண்டேல்,” எங்கள் பொதுவான பாரம்பரியம்,  சீனா மற்றும் இந்தியா “குறித்து பேசினார், இது சீன நாளில் மெட்ராஸ் வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. தனது உரையில், இரு நாடுகளும் பெண்களை எவ்வாறு மதிக்கின்றன என்பதற்கு இடையிலான ஒற்றுமையை அவர் எடுத்துரைத்திருந்தார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்:

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கப்பல்போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.