டெல்லி: மோடிஜியின், ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக வடமாநிலங்களில் மக்களிடையே வகுப்புவாத மோதலை ஏற்படுத்தும் வகையிலான  வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து நீதி மன்றமும் மத்தியஅரசை கடுமையாக சாடியுள்ளன. இந்து சாமியார்களின் மாநாட்டில் பேசப்படும் பேச்சுக்கள், ராமநவமி அன்று நடைபெற்ற கலவரம் போன்றவை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவில் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு சர்வதேச நிறுவனங்கள் வெளியேறி வருவதை சுட்டிக்காட்டி இருப்பதுடன், இந்தியாவில் ஹேட்-இன்-இந்தியாவும், மேக்-இன்-இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது, அதாவது நாட்டின் வளர்ச்சியும், மக்களிடையே ஏற்படுத்தப்படும் வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளதுடன், நாட்டைவிட்டு வெளியேறிய ஏழு சர்வதேச நிறுவனங்களை காட்டும் படத்தையும் தனது பதிவுடன் இணைத்து,  அதுதொடர்பான விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, இந்தியாவை விட்டு 7 சர்வதேச நிறுவனங்கள் வெளியேறியுள்ளன,

9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன,

649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

84 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழக்க நேர்த்தது.

 2017இல் செவ்ரோலெட்,

2018இல் மேன் டிரக்ஸ்,

2019ல் ஃபியாட் மற்றும் யுனைட்டெட் மோட்டார்ஸ்,

2020ல் ஹார்லி டேவிட்ஸன்,

2021ல் ஃபோர்டு கார் நிறுவனம்,

2022இல் டாட்ஸன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன.

மக்களிடையே வெறுப்பை வளர்ப்பதற்கு பதிலாக இந்தியாவின் பேரழிவு தரும் வேலையின்மை நெருக்கடியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது, என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.