டில்லி
நாடாளுமன்ற கூட்டத்துக்கு வராத பாஜக உறுப்பினர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இனி வரும் நாட்களில் மேலும் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. எனவே இவை குறித்து விவாதிக்க பாஜக உறுப்பினர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றக் கூட்டங்களில் பல பாஜக உறுப்பினர்கள் வராததால் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்துப் பல முறை தெரிவித்தும் உறுப்பினர்கள் சரிவர வருவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இனி வரும் நாட்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை சமர்ப்பிக்க உள்ளதால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளன. அத்துடன் இந்த மசோதாவானது விதி எண் 370 ஐ விலக்கியதைப் போல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே உறுப்பினர்கள் ஒவ்வொரு நாள் கூட்டத்துக்கும் அவசியம் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.