பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அனைத்து அவலங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளுக்கு, அதீத பொறுப்புணர்வுடன் பொறுமையாக பதிலளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகட்டும், ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்ததாகட்டும், பிரதமர் மோடி, தனது அமைச்சரவை சகாக்களைக்கூட கலந்தாலோசிக்காமல் செய்த விஷயங்கள்தான் அவை. அவரின் சர்வாதிகாரப் போக்கிற்கு இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம்.

வாஜ்பாயைப் போன்று மோடி ஆட்சி செய்திருந்தால், தவறுகளுக்கான பொறுப்புகள் பலரையும் சார்ந்ததாக இருந்திருக்கும். ஆனால் இங்கு?

அவரின் எதேச்சதிகார முடிவுகளால் இந்தியப் பொருளாதாரம் சந்தித்த அழிவுகள் மிக அதிகம். கடந்த 45 ஆண்டுகளில், இப்போதுதான் வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. பாரதீய ஜனதாவின் ஒரே தலைவர் மோடிதான். அவர் பின்பற்றும் கொள்கை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை.

எனவே, மோடியை விமர்சிக்கும்போது, அவரின் கொள்கையையும் விமர்சிக்கும் தேவை எழுகிறது. ரஃபேல் ஊழல் என்பது இந்திய அரசின் அனைத்து கண்ணியமிக்க அரசு நிறுவனங்களையும் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்ட ஒன்று.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால், இந்தியாவின் மதிப்பு வாய்ந்த அரசு அமைப்பான ரிசர்வ் வங்கியின் சுயாட்சித் தன்மை எந்தளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.

ரஃபேல் ஊழலில் அணில் அம்பானிக்கு கிடைத்த லாபத்தொகை ரூ.30000 கோடி. இதை நிரூபணம் செய்வதற்கான பல ஆவணங்கள் உள்ளன. நான் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானவன் அல்ல. கடும் உழைப்பும் நேர்மையும் கொண்ட கார்ப்பரேட்டுகளை நான் உயர்வாகவே மதிக்கிறேன். ஆனால், அணில் அம்பானி, மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கடந்த 2014 பெருந்தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்த சுயபரிசோதனை முயற்சிகளும் நடக்கவில்லை என்று விமர்சிப்பது தவறு. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அமைப்பு ரீதியாக நாங்கள் மோடிக்கு எதிராகப் போராடி, அவரின் அபாய சிந்தனைகளின் போக்கை தகர்த்துள்ளோம். எனவே, எதுவுமே நடக்கவில்‍லை என்று கூறுவது பெரிய தவறு.

மோடியாலும், அவரின் குண்டர்களாலும் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளானாலும், இந்தியாவின் நிறுவன அமைப்புகளைப் பாதுகாப்பதில் வெற்றி கண்டுள்ளோம். வரும் தேர்தலில், மோடியை தோற்கடிக்கப்போவது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில், இந்தியாவிலிருந்து வேறு யாரையும் ஒழிக்கப் போவதாக மோடி கூறவில்லை. அவர், எங்களை மட்டும்தான் அவ்வாறு குறிவைத்துக் கூறினார் என்றால், அவருக்கான சவாலாக இருப்பது நாங்கள் மட்டும்தான் என்றுதானே அர்த்தம்.

நாடாளுமன்ற மக்களவையில், வெறும் 44 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, மோடியின் நிலம் கையகப்படுத்தல் மசோதாவை சிங்கங்கள் போல் எதிர்த்தோம். சளைக்காமல் போராடி அவர்களின் அந்த ஆபத்தான திட்டத்தை தோற்கடித்தோம் என நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

இந்த நாட்டின் காவலாளி ஒரு திருடன் என்பதை நாங்கள் முதலில் கூறவில்லை. எனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள்தான் முதன்முதலில் அதைக் கூறினார்கள்.

விவசாயிகளின் கடன்களை காவல்காரர் தள்ளுபடி செய்யவில்லை, காவல்காரர் வேலைவாய்ப்புகளைத் தரவில்லை, காவல்காரர் ரூ.15 லட்சத்தை தரவில்லை என்று நான் சத்தீஷ்கர் கூட்டத்திலே பேசியபோது, அங்கிருந்த இளைஞர்கள்தான் ‘திருடன்’ என்றார்கள்.

ஆனால், ஒரு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், இதை நான் சொல்வதால், அது பிறர் சொல்வதைக் காட்டிலும் அதிகம் பிரபலமாகிவிடுகிறது. மேலும் இந்த வார்த்தையை காங்கிரஸ் கட்சியில் நான் மட்டும்தான் பயன்படுத்துகிறேன் என்று கூறுவது தவறு. காங்கிரசின் பல மூத்த தலைவர்கள், இதை மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். அவர்கள் ‘காவல்காரர்’ என்றால், கூடியிருக்கும் கூட்டமோ ‘திருடன்’ என்கிறது.

என்னைத் தவிர, நாட்டின் இதர தலைவர்கள் இதைப் பெரிதாக சொல்லவில்லையே என்று கேட்டால், மோடி என்பவர் பழிவாங்கும் உணர்வுகொண்ட ஒரு கொடூரமான மனிதர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவரால் என்னை எப்போதும் பயமுறுத்த முடியாது. எனவே, எனது கடமை எப்போதுமே உண்மையை சொல்வதுதான்.

கடந்த 2014ம் ஆண்டிற்கு பிறகான காலகட்டங்களில், காங்கிரஸ் கட்சியில் ஆயிரக்கணக்கான இளம் தலைவர்களை இணைத்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது 50 தலைவர்களின் பெயர்களையாவது என்னால் சொல்ல முடியும்.

ஆனால், அவர்கள் அனைவருமே பெரிய அரசியல் பாரம்பரியமிக்க குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை கட்டாயம் ஏற்க முடியாது. காங்கிரஸ் கட்சி மிகவும் பழைய பாரம்பரியம் கொண்ட கட்சி என்பதால், நீண்டகால தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவது சகஜம்தான் என்றாலும், வேறு பலரையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராஜீவ் சதவ், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிமணி மற்றும் மாணிக் தாகூர், எங்களின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேஷவ் சந்த் யாதவ், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பகெல், கே.சி.வேணுகோபால் ஆகியோரெல்லாம் எந்த அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதை சொல்லுங்கள்!

எனது ரத்த உறவு பின்னணியைப் பற்றியே எப்போதும் பேசாதீர்கள். எனது நடவடிக்கைகள், திறமைகள் மற்றும் சிந்தனைகளைப் பாருங்கள். எனது பேச்சையும் – செயலையும் மதிப்பிடுங்கள். இதுதவிர, நான் தொடர்ந்து 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்.

மோடியின் பாரதீய ஜனதாவில் ஜனநாயகம் நிலவுகிறது என்று சொல்லாதீர்கள். அக்கட்சிக்கு யார் தலைவராக வருவார் என்பது மோடிக்கு முன்பே தெரியும். அமித்ஷா என்பவர் பெயரளவுக்கே அக்கட்சியின் தலைவர். ஒரு சிறிய விஷயத்தைக்கூட அவர் மோடியிடம் கேட்காமல் செய்ய முடியாது. அங்கே மோடி என்பவர் மட்டுமே ஒற்றைத் தலைமை.

காங்கிரஸ் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கம் போன்றதல்ல. இங்கே, அனைத்து முடிவுகளும் முறையாக விவாதிக்கப்பட்டே எடுக்கப்படும். ராகுல் காந்தி நாம் சொல்வதை கவனிக்கிறார், இரக்க குணமுள்ளவர் மற்றும் உண்மையைப் பேசுபவராக இருக்கிறார் என்பதால்தான், மோடிக்கு மாற்றாக மக்கள் என்னை நம்புகிறார்கள்.

மோடியால் மக்கள் மயக்கத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால், அது எவ்வளவு காலத்திற்குத்தான் முடியும்? அவரின் கொடுமையை எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை அவர்கள் மிக மோசமாக வேட்டையாடினார்கள்.

எனக்கு எதிராகக்கூட 15 முதல் 20 வழக்குகள் புனையப்பட்டுள்ளன. எனவே, நாங்கள் தற்போது போரிட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த 2014ம் ஆண்டில் கிடைத்த அனுபவத்தை நினைத்து நான் மகிழ்கிறேன். ஏனெனில், அதன்மூலம் எங்களுக்கு கிடைத்த பாடங்கள் மிக அதிகம்.

குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் குறித்து நான் கூறிய கருத்து, அரசின் தார்மீக அமைப்பை காயப்படுத்தியிருக்கலாம். அதற்காக வருந்துகிறேன்.

ஆனால், அதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை காயப்படுத்தும் நோக்கமெல்லாம் ஒருபோதும் இல்லை. அவர்மீது எப்போதும் அன்பையும் மதிப்பையும் வைத்திருப்பவன் நான். எங்கள் இருவருக்கிடையிலும் அப்படியான புரிதல் எப்போதும் உண்டு.

பயத்தை உண்டாக்கும் இழிவான வேலையில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. தெளிவான உண்மைகளை மட்டுமே நாங்கள் கூறிவருகிறோம். நாட்டை முடமாக்கும் ஏராளமான பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. ஆனால், அவற்றிலிருந்து வாக்காளர்களின் கவனத்தை மடைமாற்ற, தேசப் பாதுகாப்பு, தேச பக்தி போன்றவைகளை கிளப்பி விடுகிறார்கள்.

ஆனால், நாங்கள் ஒருபோதும் அப்படியான செயல்களில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அவர்களால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் வேலையில், நாங்கள் ஆட்சிக்கு வரும்போது ஈடுபடுவோம். பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நியாய் திட்டத்தை அறிவித்துள்ளோம்.

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களையும் சிதைப்பதற்கு பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனமே மாற்றி எழுதப்படும் என்பது நிச்சயம் உண்மையே” என்று பேசினார் ராகுல் காந்தி.

– மதுரை மாயாண்டி