கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும், இதுகுறித்து அரசு கவலைப்பட்டதாகவோ, பொருட்படுத்துவதாகவோ இல்லை, வழக்கம் போல் தேசிய பணமாக்கல் திட்டம் உள்ளிட்ட தங்கள் பணியில் அது கவனமாக இருக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானெர்ஜீ, “பிரதமரின் படம் கொரோனா சான்றிதழில் இடம்பெற்றிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை, பிடிக்காத ஒன்றை நான் சுமக்க வேண்டுமா ?” என்று கேள்வியெழுப்பி உள்ளார்.

மேலும், “உங்கள் செயல்பாடுகளை மக்கள் மீது திணிப்பதுடன், அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் ஈடுபடுகிறீர்கள், இறப்புச் சான்றிதழிலும் இதே போன்று உங்கள் படத்தை போடுவீர்களா ?” என்றும் கேட்டுள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து ராஜ்ய சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், “தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பதாக” விளக்கமளித்திருந்தார்.

ஆளும் கட்சியையும் அரசியல்வாதிகளையும் மிகைப்படுத்திக் காட்டுவதற்காகவும், கொரோனா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றியது போல் கட்டிக்கொள்ளவும் மட்டுமே இதுபோன்ற விளம்பரங்கள் உதவும் என்ற பேச்சு பரவலாக உள்ள நிலையில், மமதா பானெர்ஜீ-யின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.