டெல்லி: மேற்கு வங்கத்தில் காலியாக 3 தொகுதிகளுக்கு அகில இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. இதனால், முதல்வர் மம்தா நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வி அடைந்த நிலையிலும், மாநிலத்தில் திரிணாமுல் பெற்ற பெரு வெற்றி காரணமாக மீண்டும் ஆட்சி அமைத்து முதல்வராக இருந்து வருகிறார். இதையடுத்து, 6 மாதத்திற்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மம்தா போட்டியிடும் வகையில், அவரது ஆஸ்தான தொகுதியான பபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரிணாமுல் எம்எல்ஏ ஷோபன்தேவ் சட்டோபாத்யா தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதி உள்பட காலியாக உள்ள 3 தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.

நந்திகிராம் தொகுதியில் தோற்றது குறித்து மம்தா தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காலியாக இருந்த  பபானிபூர், சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அக்டோபர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி, பாபனிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.