டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொய் அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த 8ந்தேதி (பிப்ரவரி 8, 2024) கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பொருளாதாரம், அதைத்தொடர்ந்து மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொருளாதார ரீதியாக செய்த தவறுகள் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் வாராக்கடன் சுமையை ஏற்படுத்திவிட்டதாகவும், மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்குமுன் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாகவும் வெள்ளை அறிக்கை கூறுகிறது. “பொருளாதார செயல்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதில் ஐ.மு.கூ அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதற்குப் பதிலாக ஐ.மு.கூ உருவாக்கிய தடைகள் பொருளாதாரத்தைப் பின்தங்க வைத்துவிட்டது என்றும் விமர்சித்திருந்தது.
இதற்கு பதில் தெரிவித்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மோடி அரசின் வெள்ளை அறிக்கை ஒரு பொய் அறிக்கை என்று சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்டு இருப்பது வெள்ளை அறிக்கை அல்ல. வெள்ளை-பொய் அறிக்கை. அதை எழுதியவர்கள் கூட அது நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டது என்று ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
முந்தைய அரசை குற்றம்சாட்டவும், தற்போதைய அரசின் வாக்குறுதி மீறல்கள், மாபெரும் தோல்விகள், ஏழைகளுக்கு செய்த துரோகம் ஆகியவற்றை மறைக்கவும் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைதான் இந்த அறிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த பாவங்கள் மற்றும் தவறுகளை பூசி மெழுகுவதையே இந்த அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.
நியாயமான, பாரபட்சமற்ற ஆராய்ச்சியாக இருந்தால், 2004-ம் ஆண்டு தொடங்கி, 2014-ம் ஆண்டுடன் முடித்திருக்கக்கூடாது. இதற்கு சரியான பதில், காங்கிரஸ் வெளியிட்ட ’10 ஆண்டு அநீதி காலம்’ அறிக்கை ஆகும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் கூறும்போது, வெள்ளை அறிக்கையில், வேலையின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம் ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சீனாவுடனான எல்லை பிரச்சினை, எல்லையில் நிலவும் பதற்றம் ஆகியவற்றை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். நாங்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள், மோடியின் 2 நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கருப்பு பண மீட்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.