புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆன்லைன் முறையிலான சர்வதேச மாநாடுகளை நாட்டின் அரசுப் பல்கலைக்கழகங்கள் நடத்த வேண்டுமென்றால், மத்திய அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டுமென்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனம் மிகவும் நியாயமானதும்கூட.

ஏனெனில், உள்நாட்டு விவகாரங்கள் என்று வருகையில், விவசாயிகள் போராட்டம், கொரோனா பரவலை மத்திய அரசு கையாண்ட விதம், ஜாதிப் பிரச்சினைகள், வடகிழக்கு விவகாரம், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட எதை வேண்டுமானாலும் உள்நாட்டு விவகாரங்கள் என்ற கணக்கில் கொண்டுவரலாம். எனவே, முன்அனுமதி என்பதன் மூலம் கருத்து சுதந்தரத்தை நசுக்கும் நடவடிக்கைதான் இது என்று விமர்சிக்கின்றனர்.

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், இத்தகைய ஆன்லைன் செமினார்களில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முன்அனுமதி பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னொரு வகையில் அடக்குமுறை நடவடிக்கை.

மோடி அரசின் ஜனநாயகப் படுகொலைகளில் இதுவும் ஒன்று என்ற காட்டமான விமர்சனங்கள் எழுகின்றன.