டில்லி

கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை அடையும் எனத் தாம் எச்சரித்ததை மோடி அரசு கவனிக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துள்ளது.  10 லட்சம் பேருக்குப் பாதிப்பு ஏற்பட 4 மாதங்கள் ஆன நிலையில் அடுத்த 10 லட்சம் பேருக்கு 3 வாரங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி தனது டிவிட்டரில், “கொரோனா பாதிப்பு நாட்டில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலை நீடித்தால் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்து விடும்.  மோடி அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிந்திருந்தார்.

தற்போது நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியே கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்து விட்டது.

எனவே ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,”தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்து விட்டது.  இது குறித்து நான் முன்பே எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் மோடி அரசு எனது எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறி விட்டது” எனப் பதிந்துள்ளார்.