டெல்லியில் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி தனது திருக்கரங்களால் திறந்து வைக்க இருக்கிறார்.

மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் ஸ்வச் பாரத் முதல் வந்தே பாரத் வரை அனைத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்து வரும் நிலையில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

இந்த கட்டிடத்தை இந்திய அரசியல் அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ள ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :

“புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

இது தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை மோடி அரசு உறுதி செய்துள்ளது போல் தெரிகிறது.

இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது, மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரம்.

அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

குடியரசுத் தலைவர் தான் இந்தியாவின் முதல் குடிமகன், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது, ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும்.

மோடி அரசு பல்வேறு காலகட்டங்களில் இந்த அரசியலமைப்பு உரிமைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது.

இப்போது பிஜேபி-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் பெயரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.