புதுடெல்லி: நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக சிறப்பாக பங்காற்றும் நபர்களுக்காக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு புதிய விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஆனால், இந்த விருது மிகவும் அரிதான மற்றும் தகுதிவாய்ந்த விஷயங்களில் மட்டுமே இறப்பிற்கு பின்னர் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விருதுடன் சேர்த்து பணப்பரிசு எதுவும் வழங்கப்படாது என்றும், ஒரு ஆண்டிற்கு அதிபட்சமாக 3 விருதுகள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு நாளாக அனுசரிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி இந்த விருது பெறுவோர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விருதை, ராஷ்ட்ரபதி பவனில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவிலேயே ஜனாதிபதி உரியவர்களுக்கு வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான நபர்களை தேர்வுசெய்வதற்கு கேபினட் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கமிட்டியில் இடம்பெறும் வகையில், பிரதமரால் 3 முதல் 4 புகழ்பெற்ற நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.