சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வேவு பார்க்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களுக்கு மேலாக உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
அவருக்கு அப்பல்லோ மருத்துவர்கள் குழுவும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் நோய் தோற்று மற்றும் நுரையீரலில் நீர் சேர்ந்துள்ளது குறித்து சிகிச்சை அளிக்க, லண்டன் மருத்துவ நிபுணர் பீலே வந்து சிகிச்சை அளித்து சென்றார்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் அப்பல்லோ வந்து, முதல்வரின் உடல்நிலை குறித்து விரிவான ஆலோசனையும், அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறையையும், பரிசோதனை முடிவுகளையும் விரிவாக ஆராய்ந்து சென்றனர்.
இதுகுறித்து பலவாறாக விமர்சிக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் என்றும் வதந்திகள் பரவியது.
ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் எய்ம்ஸ் மருத்துவர் குழுவை அனுப்பி மத்திய அரசு வேவு பார்க்கிறது குற்றம் சாட்டினார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நெறியாளர் மு.குணசேகரன் நடத்தும் ‘காலத்தின் குரல்’  விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது இப்படித் தெரிவித்தார் சுதர்சன நாச்சியப்பன்.
எழுத்தாளர் மாலன், பத்திரிகையாளர் கோலப்பன், பாஜகவின் கே.டி.ராகவனும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி யில் முதல்வர் ஜெயலலிதாவை ராகுல் காந்தி பார்க்க வந்தது நாகரீக அரசியலா அல்லது அரசியல் கணக்கா என்ற கேள்வியுடன் விவாதம் தொடங்கியது.
அதில் கலந்து கொண்டு சுதர்சன நாச்சியப்பன் வைத்த கருத்துக்கள். தமிழகத்தின் முதல்வர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்ற அடிப்படையில் அவரைப் பார்க்க வந்தார் ராகுல் காந்தி.
அதிமுக, காங்கிரஸ் இடையே உறவு இல்லை என்று சொல்ல முடியாது. உறவு இருக்கிறது.  1996க்குப் பிறகு உறவு இல்லை என்று சொல்ல முடியாது. அது இருக்கிறது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முதலில் வாரியத்தை அமைக்க ஒப்புக் கொண்ட மோடி அரசு பின்னர் அதை மறுக்கிறது.
தமிழகத்திற்கு ஆளுநரை அனுப்பி என்ன நடக்கிறது என்று பார்க்கிறது.
இங்கிருப்பவர்கள் கேட்காமலேயே எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி என்ன நடக்கிறது என்று உளவு பார்க்கிறது. என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்புகிறது.
இதெல்லாம் அரசியல் என்று சொல்லும்போது உணர்வோடு, 25 நாட்கள் உ.பியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வந்தார் ராகுல் காந்தி உங்களுக்கு முழுமையாக துணை நிற்போம் என்று அவர் கூறினார்.
மோடி மாநில அரசுகளைக் கவிழ்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலும் அதைச் செய்ய திட்டமிடுகிறார். அதைத் தடுப்பதற்குத் துணை நிற்போம் என்று சொல்வது, ஒன்றரை கோடி அதிமுக தோழர்களு்கும், ஏழரை கோடி தமிழர்களுக்கும் கொடுக்கும் ஊக்கமாகும்.
மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியைக் காக்கும் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.
jey-sudar
மு. குணசகேரன் கேள்வி – ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏன் வருகிறது, எதற்காக வருகிறது. எதற்காக காங்கிரஸ் துணை நிற்க வேண்டும். அதிமுகவிடம்தான் பெரும்பான்மை உள்ளதே. எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவிக்குத்தானே வந்தார்கள்?
சுதர்சன நாச்சியப்பன்: என்ன உதவி செய்தார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். நல்லமுறையில்தானே சிகிச்சை நடந்து கொண்டுள்ளது.
பிறகு எதற்கு வந்தார்கள். என்ன அறிக்கை கொடுத்தார்கள். யாரிடம் கொடுத்தார்கள். ஆளுநருக்கு கொடுத்தார்கள். அவர் யாருக்கு அனுப்பி வைப்பார். மோடிக்குத்தான் அனுப்பி வைப்பார். மோடி ஒரு மாநிலத்தை சிதறடிக்க என்ன செய்வார் என்பதை நாங்கள் அறிவோம்.
அருணாச்சல் பிரதேசத்தில் அதைப் பார்த்தோம். பீகாரிலும் அதைத்தான் செய்கிறார். மாநிலம் மாநிலமாக செய்து பார்க்கிறார். அதை சுப்பிரமணியன்சாமி வெளிப்படையாக சொல்கிறார்.
வேவு பார்ப்பது என்பதை நாகரீகமாக இன்டலிஜென்ஸ் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மாவட்ட அளவில் இந்த இன்டலிஜென்ஸ் உள்ளது. அவர்கள் தலைமைச் செயலாளருக்கு அறிக்கை தருவார்கள். முதல்வருக்கும் தருவார்கள். ஆளுநருக்கும் தருவார்கள். உள்துறை அமைச்சகத்திற்கும் போகிறது.
ஆளுநரின் வேலை என்ன.. மாநிலத்தில் நடப்பதை பார்த்து அனுப்புவதுதான் அவரது வேலை. அதை ஒற்று என்றும் சொல்லலாம். இதுதான் அவரது தினசரி வேலை.
இதெல்லாம் தெரிந்துதான், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல சாமியின் பேச்சு அமைந்துள்ளது.
மோடி என்னவெல்லாம் சிந்திப்பாரோ யாரை மாற்ற வேண்டும் என்று விரும்புவாரோ, அதை சாமி மூலமாக வெளிப்படுத்துவார். கடந்த இரண்டரை வருடமாக இதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினையிலிருந்தே மோடி திட்டமிட்டு விட்டார். முதலில் தலைமை வழக்கறிஞர் மூலமாக ஒத்துக் கொண்டு விட்டு பின்னர் மறுத்து விட்டார்கள்.
ஒரு வாரமாகவே திட்டமிட்டு தமிழகத்தில் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்த முயல்கிறார்கள். பல மாநிலங்களை கலைத்துள்ளனர். சுப்ரீ்ம் கோர்ட்டில் போய்த்தான் பல மாநிலங்கள் நிவாரணம் பெற்றுள்ளன. அந்த நிலை தமிழகத்திற்கு வந்து விடக் கூடாது.
சாமி நடவடிக்கையிலிருந்து, சுப்ரீம் கோர்ட்டில் காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்த நிலையிலிருந்து பார்க்கும்போது தமிழகத்திற்கு மோடி நெருக்கடி தருவதாக நான் கூறுகிறேன்.
ஆட்சியை உடைக்க மோடி முயற்சித்தால் அதைத் தடுப்போம் என்று கூறவே ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.
திமுகவுடன் எங்களது உடன்பாடு தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அந்த உடன்பாடு நீடிக்கும். இப்போது ராகுல் காந்தி பார்க்க வந்தது குறிப்பிட்ட நபரை. அவரைப் பார்த்தாயிற்று, பேசியாயிற்று.
திமுக உறவு என்பதும், ஒரு மாநில ஆட்சியைக் காப்பது என்பதும் வேறுபட்டது.
அருணாச்சல் பிரதேசம் போல மாற்ற நினைக்கிறார்கள். அதைத் தடுக்க நினைக்கிறோம்.
இப்போது ராகுல் காந்தி வந்த வேலை வேறு. அதை மட்டும்தான் அவர் பார்க்க முடியும்.
கலைஞரை சந்திக்க வாய்ப்பு வரும்போது நிச்சயம் சந்திப்பார் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.