சென்னை
பிரதமர் மோடிக்கு காமராஜர் பெயரை உச்சரிக்க தகுதி இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்த கூட்டணியில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸை தாக்கி பேசினார். இதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கே எஸ் அழகிரி தனது அறிக்கையில், “பாஜகவால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஒரு இடம் கூட வெல்ல முடியாத அளவுக்கு மக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. அதை ஒட்டி பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்தில் சுற்றுப்பய்ணம் செய்கிறார்.
மோடி கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறிதிகள் எதையும் நிறவேற்றவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்ற பல திட்டங்கள் அறிவித்து வருகிறார். அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்கவில்லை. இது போல் ஒரு அரசியல் மோசடி எதுவும் இருக்காது.
ஒவ்வொரு உரையிலும் மோடி தமிழின் பெருமை பற்றி பேசிகிறார். ஆனால் அவர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கிடையாது. இந்த செய்கையால் மோடி தமிழ்த்தாயை இழிவு படுத்துகிறார். தேச பக்தி பற்றி ஊருக்கு உபதேசம் செய்யும் மோடியின் கூட்டத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவது இல்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றப் போவதாக மோடி தெரிவிக்கிறார். ஆனால் சென்ற மக்களவை தேர்தலில் ஜெயலலிதா மோடியை எதிர்த்து பிரசாரம் செய்துள்ளார். அவர் தனது கூட்டங்களில் மோடியா இல்லை லேடியா என கேட்டதை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்
மோடி தனது உரையில் மத்திய காங்கிரஸ் காமராஜரை அவமதித்ததாக பொய் தகவல் கூறுகிறார். மோடியால் காந்திக்கும் காமராஜருக்கும் உள்ள உறவையும் ராஜாஜிக்கும் காமராஜருக்கும் இருந்த நட்பையோ புரிந்துக் கொள்ள முடியாது. ஆர் எஸ் எஸ் விடுதலை போராட்ட சமயத்தில் பிரிட்டிஷார் ஏஜண்டுகளாக இருந்தனர் என்பதும் மோடிக்கு தெரியாது.
கடந்த 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி டில்லியில் நடந்த மத வெறியர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது காமராஜர் வீட்டில் கல் எறி தாக்குதல் நடந்தது. அப்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரை அப்போது வீட்டிற்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். காமராஜர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். அத்தகைய கும்பலின் வழி வந்த மோடிக்கு காமராஜரின் பெயரை உச்சரிக்கக் கூட தகுதி இல்லை.” என தெரிவித்துள்ளார்.