உடுப்பி
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் உள்ளதால் அவர் உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு செல்லவில்லை என பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் கூறி உள்ளார்.
கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி கர்நாடகா மாநிலம் உடுப்பிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்தார். அப்போது மோடி உடுப்பியில் உள்ள எம் ஜி எம் மைதானத்தில் நடந்த ஒரு மாபெரும் பேரணியில் கலந்துக் கொண்டார். அதன் பிறகு அவர் புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் அவர் மடத்துக்கு செல்லப் போவதில்லை என பாஜக அறிவித்தது. இது உடுப்பி மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது. மோடி உடுப்பி மடத்துக்கு செல்லாதது குறித்து செய்தியாளர்கள் பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரந்தலஜி இடம் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு அவர், “உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு செல்ல மோடி மிகவும் ஆசையுடன் இருந்தார். ஆனால் அவருடைய பாதுகாப்புப் படையினர் மோடிக்கு கொலை மிரட்டல் உள்ளதால் அவரை அங்கு செல்ல விடாமல் தடுத்தனர். மோடி இதனால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆனால் உடுப்பி மடத்துக்கு மோடி செல்லாததற்கான உண்மையான காரணங்கள் குறித்து சரியாக தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.