டில்லி:
த்திய மந்திரி உமாபாரதியை  சந்தித்து பேசினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. மேலும் , காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்கவும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி படுகையில் உள்ள 4 அணைகளும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்பதால் கர்நாடகத்தில் அனைத்துக்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கர்நாடக பாரதியஜனதாவும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கூறி வருகிறது. மத்திய அமைச்சர்கள்   அனந்தகுமார், சதானந்த கவுடா ஆகியோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
 
எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்றும், இதற்காக மத்திய அரசு மீது கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர்  வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று கர்நாடகாவில் காவிரி பிரச்சினை குறித்து சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ய கோரியும் தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
கர்நாடகாவை சேர்ந்த  மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடா டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்றும் காவிரி நீர் விவகாரத்தை கண்காணிக்கும் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் எக்காரணம் கொண்டும் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட கூடாது என்று வலியுறுத்தினார்.
தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது. காவிரி நீர் கர்நாடகாவுக்குச் சொந்தமானது என்பதால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது என மேலும் வலியுறுத்தி உள்ளார்.
அவரது ஏற்பாட்டின்பேரில்தான், முதல்வர் சித்தராமையா மத்திய அமைச்சர் உமாபாரதியை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.
 
இதற்கிடையில், நேற்று  கர்நாடக முதல்வர் சித்தராமையா  தனி விமானம் மூலம் அவரசமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா, மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரும் சென்றனர்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதியை அவருடைய அலுவலகத்தில் சித்தராமையா  சந்தித்து பேசினார்.
அப்போது, எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றும், வருகிற 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறும்போது மத்திய அரசு சார்பில் அதற்கு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யுமாறும் கூறினார்.
இது குறித்து பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உமாபாரதி கூறினார் என்று சித்தராமையாக கூறினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு, சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் கர்நாடகமோ அல்லது தமிழகமோ இதை அமைக்குமாறு கேட்கவில்லை. அவ்வாறு இருந்தும் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வாரியத்தை அமைக்கும்படி கூறியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். இந்த சூழ்நிலையில் இந்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று நான் மத்திய மந்திரி உமாபாரதியிடம் எடுத்துக் கூறினேன்.அதற்கு, அவர்  அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார் என்றார்.
மேலும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு நான் பல முறை கேட்டுவிட்டேன். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை“ என்றார்.
ஆனால், இந்த சந்திப்பின்போது, உமாபாரதி, காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்க அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை சொல்லாமல், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி மேலாண்மை வாரியம் அமைப்பதை தடுக்க, கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் நிர்பந்தத்தின்பேரில் கர்நாடகாவுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும் என்று கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.
ஆனால், காவிரி பிரச்சினை தொடர்பாக,  தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, எம்.பிக்களோ இதுவரை மத்திய அமைச்சரையோ, பிரதமர் மோடியையோ சந்திக்கவில்லை என்பது பரிதாபகரமானது.