சென்னை:
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு புராதன நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை தமிழகம் வருகின்றனர். இவர்களின் வருகையை யொட்டி சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில், வழி நெடுகிலும் பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளனர். மேலும் மாமல்லபுர சிற்பங்களையும் கண்டு ரசிக்க உள்ளனர்.
இதன் காரணமாக, மாமல்லபுரம் தீவிரமாக சுத்தப்படுத்தப்பட்டு, அலங்கார வளைவுகள் அமைக்கப் பட்டும் கிளின் நகரமாக காட்சி அளிக்கிறது. அங்குள்ள புராதன சின்னங்களான வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
வண்ண விளக்குகள், பளபளவென சாலைகள் பசுமை போர்த்திய புல்தரைகள் என மாமல்லபுரம் பசுமை நகரமாகவே மாறிப்போயுள்ளது.
சீன அதிபரை வரவேற்கும் வகையில், இந்தியா – சீனா கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலான ஓவியங்கள் விமானநிலைய சுவர்களில் வரையப்பட்டுள்ளன.
ஒரு கப்பலில் யானையும் டிராகனும் பயணம் செய்வது போலவும், பிரதமர் மோடி மகாபலிபுரம் கடலை பார்த்து நின்று கொண்டிருப்பதைப் போலவும், புத்தரின் ஒவியங்கள் என சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓவியம் தீட்டப்பட்டுள்ளன.
அதோடு, விமானநிலைய நுழைவு வாயில் முன்பு புதிய செயற்கை பூங்கா உருவாக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு 5 மற்றும் 6-வது நுழைவு வாயில் பயன்படுத்தப்படும் என்பதால் அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
மாமல்லபுரமே வித்தியாசமான வகையில் புதுப்பொலிவுடன் பசுமையாக காட்சி அளிப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.